ஐபிஎஸ் அதிகாரி ஏமாற்றியதாக புகார்: கிண்டி ஆளுநர் மாளிகைக்கு பெட்ரோல் கேனுடன் மனு கொடுக்க வந்த பெண்


சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகைக்கு பெட்ரோல் கேனுடன் மனு கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை உள்ளது. இந்த மாளிகையின் இரண்டாவது நுழைவாயில் அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பெட்ரோல் கேனுடன் நேற்று முன்தினம் வந்திருந்தார். ஆளுநரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் கேனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார், நைசாக பேச்சுக் கொடுத்துகேனை வாங்கி வைத்துவிட்டு அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரைச் சேர்ந்த மஞ்சுளா (41) என்பதும், கணவரை பிரிந்து வாழ்கிறார் என்பதும் தெரியவந்தது.

அவர் கொண்டு வந்த மனுவை படித்து பார்த்தபோது, திருவள்ளூர் மாவட்டத்தில் எஸ்.பி.யாக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி, இன்ஸ்டாகிராம் மூலம் தன்னிடம் பேசி வந்ததாகவும், நேரில் சந்தித்துக் கொள்ளாமல் ஷேர் சாட் மூலம்3 வருடங்களாக தன்னிடம் பழகியதாகவும் திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நான் இறந்தால் அவர்தான் காரணம் என்றும் எழுதப்பட்டிருந்தது.

உறவினர்களிடம் ஒப்படைப்பு: இதையடுத்து அந்த பெண்ணை சமாதானப்படுத்திய போலீஸார், மனுவை நாங்கள் ஆளுநரிடம் கொடுத்து விடுகிறோம் எனக் கூறிஅந்த பெண்ணை கிண்டி மகளிர்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கிண்டி போலீஸார் தங்கள் வாகனத்தில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அழைத்துச் சென்று அங்குள்ள போலீஸார் உதவியுடன், அவரது உறவினர்களிடம் அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.

மஞ்சுளா கடந்த 2019-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் கவர்ச்சி திட்டங்களை நம்பி 5,000 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.

இது தொடர்பாக அப்போதைய திருவள்ளூர் மாவட்டகண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துசம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்திருந்தனர்.

இந்நிலையில்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டகண்காணிப்பாளராக இருந்தவரின் பெயரை, அடிக்கடி சொல்லி புலம்பி வருவதாகவும் தெரிய வருகிறது என போலீஸார் தெரிவித்தனர்.

x