பால் கனகராஜிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பு துலக்கும் பணி தீவிரம்


சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பு துலக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பால் கனகராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் போலீஸார் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம்தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். மேலும், கொலை பின்னணியில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள அவரது தந்தை பிரபல ரவுடியான நாகேந்திரன் இருப்பதால் அவரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

இதன்தொடர்ச்சியாக பாஜகமாநில துணைத் தலைவரும்சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான பால் கனகராஜை கடந்த வெள்ளிக்கிழமை அழைத்துதனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். 7 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், பால்கனகராஜ் அளித்த தகவல்களை போலீஸார் பதிவு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பால்கனகராஜ், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

இருந்தாலும், அவர் அளித்த பல்வேறு தகவல்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை முன்னோக்கி எடுத்துச் செல்ல உதவியாக இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அதாவது, பால்கனராஜ் 35 ஆண்டுகளாக வழக்கறிஞராக உள்ளார். பல்வேறு தரப்பினருக்கு ஆதரவாக அவர் வாதாடி உள்ளார். அதில், குற்ற பின்னணி தொடர்புடையவர்களும் உள்ளனர். அதுகுறித்த தகவல்களை சேகரித்த போலீஸார் அதை அடிப்படையாக வைத்தும் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.

போலீஸாருக்கு சவால்

மேலும், சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை போலீஸ் காவலில் எடுப்பதற்கான நடவடிக்கையையும் போலீஸார் எடுத்துள்ளனர். இதுஒருபுறம் இருக்க போலீஸாருக்கு சவால் விடுக்கும் வகையில் தொடர்ந்து தலைமறைவாக உள்ளபிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தேடும் பணியையும் போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

x