கேரள காவல்துறையிடமிருந்து தப்பியோடிய நபர்: நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் கைது


ராமேசுவரம்: கேரளா மாநிலம் திருச்சூர் போலீஸ் காவலிருந்து தப்பிய இலங்கையர் சர்வதே கடல் எல்லையை கடக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் உள்ள கொழும்புவை சேர்ந்தவர் அஜித் கிஷான் பெரேரா. இவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 2021ம் ஆண்டு கொச்சி போலீஸாரால் கைது செய்யப்பட்டு திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த ஜூலை 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸாரால் அழைத்துச் சென்ற போது தப்பிச் சென்றுள்ளார்.

அங்கிருந்து அஜித் கிஷான் பெரேரா கன்னியாகுமரி வந்து, ஒரு நாட்டுப் படகை திருடி இலங்கைக்கு செல்லும் வழியில் சர்வதே கடல் எல்லையை கடக்கும் போது இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார்.

அஜித் கிஷான் பெரேரா பிடிப்பட்டது குறித்து இலங்கை கடற்படையினரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக திருச்சூர் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய-இலங்கை இரு நாட்டு கைதிகள் பறிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் அஜித் கிஷான் பெரேராவை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறும் என தெரிகிறது.

x