பரபரப்பு… பீகாரில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!


பீகாரில் பயணிகள் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

டெல்லி ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரயிலின் (12506) 3 பெட்டிகள் பீகாரில் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு சுமார் 9.35 மணியளவில் தடம் புரண்டன.

இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப்பணி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், காயம் அடைந்தவர்கள் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் விபத்து குறித்து அறிந்த பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், துறைசார்ந்த அதிகாரிகளுடன் பேசி மீட்பு மற்றும் மருத்துவ உதவிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அதே போல், அஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா, ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். விபத்து குறித்து தகவல் அறிய ரயில்வே சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாட்னா – 9771449971, தனபூர் – 8905697493, மற்றும் 8306182542, 7759070004 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நிகழ்ந்த ஒடிசா விபத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், மீண்டும் ஒரு ரயில் விபத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x