பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, பாஜகவை உண்மையில் எதிர்ப்பதாக இருந்தால் இந்தியா கூட்டணியில் வந்து இணைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் திவாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்தியில் இரண்டாவது முறையாக ஆளும் பாஜகவை எதிர்த்து இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான வலுவான மாநில கட்சிகள் அனைத்தும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பது இவர்களின் ஒற்றை அஜெண்டாவாக இருக்கிறது.
அதனை முன்னிட்டு தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளையும் கைவிட்டு ஒன்றாக இணைந்துள்ளனர். ஆனால், ஒரு சில மாநிலங்களில் இருக்கும் முக்கிய கட்சிகள் சில இந்த கூட்டணியில் இணையவில்லை. அதில் ஒன்றாக உத்தரப்பிரதேசத்தை ஆண்ட கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த கூட்டணியில் இணையாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாஜகவை உண்மையில் அந்த கட்சி எதிர்ப்பதாக இருந்தால் இந்தியா கூட்டணியில் அந்த கட்சி இணைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் திவாரி கேட்டுக் கொண்டுள்ளார்
காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். "மாயாவதி பாஜகவை உண்மையாகவே எதிர்ப்பதாக கருதினால், இந்தியா கூட்டணியில் அவர் கட்சி இணைய வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சிக்கு மோடியை எதிர்க்க துணிவில்லை என்றால் பரவாயில்லை, அவர்கள் தனியாகவே செயல்படட்டும்" என்று தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மற்றொரு பெரிய கட்சியான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடனும் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றம் எதுவும் இல்லை. அங்கு சமாஜ்வாடி உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால், பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த கூட்டணியில் இணையும் பட்சத்தில் மிக வலுவான கூட்டணியாக அது மாறும்.