கோவையில் வேளாண் துறை சார்பில் ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி 


கோவை: வேளாண்மைத் துறையின் சார்பில் கோவை மாவட்டத்தில் ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடாசலம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'கோவை மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், அனைத்து வட்டாரங்களில் உள்ள ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடப்பாண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், தமிழ்நாடு வேளாண்மைத்துறையும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்கமும், ஹைதராபாத் மேனேஜ் நிறுவனமும் இணைந்து ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வரும் 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி இலவசமாக மாவட்ட ஊரக இளைஞர்களுக்காக நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சிக்கான கையேடு, பாடத்திட்டங்கள் பயிற்சியில் கலந்து கொண்டமைக்கான சான்றிதழ், உணவு வழங்கப்படும்.

இப்பயிற்சிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வல்லுநர்களால் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு வகுப்புகள் மற்றும் செயல்முறை பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. எனவே, விருப்பம் உள்ள ஊரக இளைஞர்கள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x