இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது வீராணம் ஏரி!


கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி.

கடலூர்: இந்த ஆண்டில் 2-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச் சியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியின் வாழ்வாதார மாக விளங்கி வருவது காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். ஏரிக்கு காவிரி தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வந்து சேர்கிறது. இதன் மூலம் 44,856 ஏக்கர் நிலங்கள் பாசனம் பொறுகின்றன. ஏரியில் இருந்து சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம், கடும் வெயில் மற்றும் கீழணையில் இருந்து நீர் வரத்து குறைந்ததால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.

அந்தச் சூழலிலும் சென்னைக்கு தண்ணீர் அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கிடையே, மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு, அந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கீழணைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து வடவாறு வழியாக ஏரிக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன்26-ம் தேதி ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி, இந்தாண்டில் முதன் முறையாக நிரம்பியது. தொடர்ந்து சென் னைக்கு தண்ணீர் அனுப்பி வைக் கப்பட்டு வந்தது.

பாசனத்துக்கும் தேவையான நீர் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கர்நாடகத்தில் இருந்து காவிரியில் நீர் திறந்து விடப்பட்டதால், மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர் அதிக அளவில் கொள்ளிடத்தில் வந்தது. அந்தத் தண்ணீர் கீழணையில் இருந்து வடக்கு, தெற்கு, குமிக்கி மண்ணியாறு, வடவாறு வழியாக பாசனத்துக்காக அனுப்பி வைக் கப்பட்டது. இந்த நிலையில் கீழணையில் இருந்து நேற்று விநாடிக்கு 1,886 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

நேற்று மாலை நிலவரப்படி ஏரி அதன் முழு கொள்ளளவான 45.50 அடியை எட்டி, இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியுள்ளது. ஏரியில் இருந்து சென்னைக்கு விநாடிக்கு 73 கன அடியும், விவசாய பாசனத்துக்காக விநாடிக்கு 101 கன அடி தண்ணீரும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியின் வடிகால் மதகான விஎன்எஸ்எஸ் மதகு வழியாக விநாடிக்கு 1,148 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நீர் வளத்துறை சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் விஜயகுமார், கொளஞ்சிநாதன், வீராணம் உதவி பொறியாளர் சிவராஜ் மற்றும் நீர் வளத்துறை பணியார்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்து ஏரிக்கரைகளை கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த கூடுதல் வரத்தின் காரணமாக, கீழணையில் கொள்ளிடம் ஆற்றில் திறத்து விடப்பட்ட தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது.

x