சாதிய மோதல்களை தடுக்க நடவடிக்கை: திருநெல்வேலி சரக புதிய டிஐஜி தகவல் 


திருநெல்வேலி: திருநெல்வேலி சரகத்தின் 49-வது டிஐஜியாக பா.மூர்த்தி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பா.மூர்த்தி திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். எம்.எஸ்சி, எம்.பில், பிஎச்டி படித்துள்ள இவர், 1998-ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று 1999-ம் ஆண்டு பயிற்சியை முடித்தார்.

காவல் துணை கண்காணிப்பாளராக புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் பணிபுரிந்துள்ளார். 2006-ம் ஆண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று நீலகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.

2007-ம் ஆண்டு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று துணை காவல் ஆணையராக திருச்சி, கோவை, சேலம், தாம்பரம் ஆகிய மாநகரங்களிலும், காவல் கண்காணிப்பாளராக புதுக்கோட்டை, திருவாரூர், கோவை, திருச்சி மாவட்டங்களிலும், சிபிசிஐடி மற்றும் சிறப்பு இலக்குப் படையிலும் பணியாற்றியுள்ளார். 2009-ம் ஆண்டு ஐபிஎஸ் அந்தஸ்து பெற்றார்.

2023-ம் ஆண்டு காவல் இணை ஆணையராக தாம்பரம் மாநகரிலும், பின்னர் காவல் ஆணையராக திருநெல்வேலி மாநகரிலும் பணியாற்றியுள்ளார். டிஐஜி மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''திருநெல்வேலி சரகத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாதிய மோதல்கள், பழிக்குப் பழி கொலைகள், வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் செயல்களை தடுக்கவும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவும் தனி கவனம் செலுத்தப்படும். பொதுமக்களுடன் இணைந்து அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்'' என்றார்.

x