தென்காசி: குற்றாலத்தில் வெயிலில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் குளித்தனர்.
தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். குளிர்ந்த தென்றல் காற்று, அடிக்கடி பெய்யும் சாரல் மழை, ஆர்ப்பரிக்கும் அருவிகள் சுற்றுலாப் பயணிகளை குதூகலப்படுத்தும்.
இந்த ஆண்டில் சில நாட்கள் சாரல் மழை தீவிரமாகவும், சில நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் காணப்படுகிறது. கடந்த 6 நாட்களாக மழையின்றி வறண்ட வானிலை காரணமாக வெயில் அதிகரித்துள்ளது.
விடுமுறை தினமான இன்று குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. கூட்ட நெரிசலை தவிர்க்க பிரதான அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரு மணி நேரம் வரை வெயியில் காத்திருந்து அருவிகளில் குளித்துச் சென்றனர்.
சாரல் மழை, தென்றல் காற்று இன்றி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.