105.2 மிமீ மழை பதிவு: தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கேயுள்ள எண்ணேக்கொள்புதூர் தடுப்பணை நிரம்பி ஆற்றில் நுரை பொங்க தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. படம்: எஸ்.கே. ரமேஷ்

கிருஷ்ணகிரி / தருமபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பெணுகொண்டாபுரத்தில் நேற்று முன்தினம் 105.2 மிமீ மழை பதிவானது. இதனிடையே, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து இருந்தது. இருப்பினும் பகலில் வெப்பத்தின் தாக்கம் இருந்தாலும், மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, ஓசூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. குறிப்பாக, போச்சம்பள்ளி, மத்தூர், கண்ணன்ட அள்ளி, கொடமாண்டப்பட்டி, வலிப்பட்டி, சிவம்பட்டி, ஊத்தங்கரை, பாம்பாறு உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் மழை பெய்தது.

இதனால், அப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதேபோல, வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழை பெய்ததால், ஆடிப்பட்டத்தில் மானாவாரி நிலங்களில் நிலக் கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, நேற்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி பல்வேறு பகுதிகளில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: பெணு கொண்டாபுரம் 105.2, ஊத்தங்கரை 100.2, நெடுங்கல் 86.4, பாம்பாறு அணை 65, போச்சம்பள்ளி 64, பாரூர் 62.8, கிருஷ்ணகிரி அணை 37.8, ராயக்கோட்டை 20, ஓசூர் 18, தளி, கெலவரப்பள்ளி அணை தலா 15, தேன்கனிக்கோட்டை 8, சூளகிரி 6, கிருஷ்ணகிரி, அஞ்செட்டி, சின்னாறு அணை தலா 5 மிமீ மழை பதிவானது.

கிருஷ்ணகிரி அணை நிலவரம்: கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 608 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 870 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றில் விநாடிக்கு 744 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.85 அடியாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட தென்பெண்ணை நீர்ப் பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நீர்வளத்துறைச் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் 70 மிமீ மழை: தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் முதலே குளிர்ந்த வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து சில பகுதிகளில் லேசான தூறலுடன் கூடிய மழையும் பெய்தது. பின்னர் இரவு கனமழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக தருமபுரி பகுதியில் 70 மில்லி மீட்டர் மழை பதிவானது. பாலக்கோடு பகுதியில் 68 மி.மீ., மாரண்டஅள்ளியில் 23 மி.மீ., பென்னாகரம்18 மி.மீ., ஒகேனக்கல் 4 மி.மீ. மழை பதிவானது.

x