இளைஞர்களின் வாக்குகளை பெறவே தமிழ்ப் புதல்வன் திட்டம்: சீமான் விமர்சனம்


அரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அரூர்: இளைஞர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே, தமிழ்ப் புதல்வன் திட்டத்தை திமுக அரசு தொடங்கியுள்ளது என அரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.

தருமபுரி மாவட்டம் அரூரில், உலகப் பழங்குடியினர் தினத்தையொட்டி, நாம் தமிழர் கட்சி பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: "நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது. நாங்கள் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டவில்லை. கோடிக் கணக்கில் பணத்தை கொடுத்து வாக்குகளை பெறவில்லை. ஒரு தேர்தலில் 17 லட்சம் வாக்குகள் பெற்றோம். அடுத்து தேர்தலில் 30 லட்சம், இந்த தேர்தலில் 35 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கின்றோம். இந்த வாக்குகள் படிப்படியாக அதிகரிக்கும். ஒரு கோடிக்கு மேல் வாக்குகளை வாங்குவோம். ஆனால், இங்கு திமுக முதல்வர், அமைச்சர் என இணைந்து கோடி கோடியாய் செலவு செய்கிறார்கள்.

ஆனால் கூட்டத்தைக் கூட்ட முடிய வில்லை. காசே இல்லாமல் திமுக கூட்டத்தை கூட்டினால் நான் கட்சியை கலைத்து விட்டு செல்கிறேன். கல்லூரி படிக்கின்ற இளைஞர்களும், இளம் பெண்களும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். அவர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே, தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கி இருக்கிறார்கள்.

பெண்களுக்கு மகளிர் உரிமைத் திட்டம், கல்லூரி படிக்கும் இளம் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம், இன்று இளைஞர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம் இதன் மூலம் எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கி சீமானுக்கு விழுகின்ற வாக்குகளை பெற வேண்டும் என திமுக அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. இது ஆயிரம் ரூபாய் அரசு என்றுதான் சொல்ல வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

x