ஒரே நாளில் ஏற்காடு 121.4 மிமீ, வீரகனூரில் 114 மிமீ கொட்டிய மழை - வசிஷ்ட நதியில் வெள்ளம்


சேலம் பச்சப்பட்டியில் பெய்த கனமழையால், வீதிகளில் வெள்ளம் சூழ்ந்து, வடியாததால், மக்கள் அவதிப்பட்டனர். (அடுத்த படம்) கனமழை காரணாக, சேலம் திருமுணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம்: சேலம் மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. அதிகபட்சமாக, ஏற்காட்டில் 121.4 மிமீ., வீரகனூரில் 114 மிமீ., மழை கொட்டியது. கனமழை காரணமாக, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி, சுவேத நதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக, ஏற்காட்டில் ஒரே நாளில் 121.4 மிமீ., மழை கொட்டியது. இதனால், ஏற்காடு மலைக் கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், ஏற்காடு மலைப் பாதையில் ஆங்காங்கே திடீர் அருவி உருவானது. கனமழையால், திருமணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு 83.4 மிமீ., மழை கொட்டியது. சாலைகளில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த பச்சப்பட்டியில் அசோக் நகர், நேரு வீதி உள்ளிட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. பச்சப்பட்டி வீதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியதால், மக்கள் அவதிப்பட்டனர். சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில், மழைநீர் தேங்கியதால், குளம் போல மாறியது.

பொன்னம்மாப்பேட்டை மிலிட்டரி சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டது. மாநகரின் பல இடங்களில் மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே, தலைவாசலை அடுத்த வீரகனூரிலும் ஒரே நாளில் 114 மிமீ., மழை பெய்தது. வீரகனூரை அடுத்துள்ள கெங்கவல்லியில் 66 மிமீ., தம்மம்பட்டியில் 64 மிமீ., என சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால், நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அங்குள்ள சுவேத நதியில் மழைநீர் செந்நீராக ஓடியது.

இதேபோல், ஆனைமடுவில் 65 மிமீ., ஆத்தூர் 75 மிமீ., கரியகோவில் 60 மிமீ., தலைவாசல் 57 மிமீ., என வசிஷ்ட நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், வறண்டு கிடந்த வசிஷ்ட நதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளான சங்ககிரியில் 56 மிமீ., எடப்பாடியில் 23.4 மிமீ., ஓமலூரில் 20 மிமீ., டேனிஷ்பேட்டையில் 22 மிமீ., மேட்டூரில் 7.2 மிமீ., மழை பதிவானது.

x