போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.38 கோடி - அரசாணை வெளியீடு


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் வரையிலான காலக் கட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் வரை உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது. பணப்பலனில் ஒரு பகுதியை (50 சதவீத பிஎஃப்) வழங்க ரூ.38.73 கோடி தேவைப்படுகிறது.

இதில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.9.6 கோடி, விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1.1 கோடி, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்களுக்கு முறையே ரூ.5.8 கோடி, ரூ.3.6 கோடி, ரூ.4.3 கோடி, ரூ.8 கோடி, ரூ.3.2 கோடி, ரூ.2.9 கோடி வழங்க வேண்டும். இதற்காக அரசு நிதி வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து கடிதம் பெறப்பட்டது. இதை கவனமாக பரிசீலித்த அரசு, ரூ.38 கோடியே 73 லட்சத்து 65 ஆயிரம் ஒதுக்கி ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை வரவேற்பு - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து ஓய்வூதியர்களின் ஓய்வுகால பணப்பலனுக்காக ரூ.38 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. கடந்த 18 மாதங்களாக ஓய்வூதியர்களுக்கான பணப் பலன் வழங்காமல் இருந்த தமிழக அரசு, இந்தப் பிரச்சினையை பாஜக முன்னெடுத்ததும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறோம். மேலும், கடந்த 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப் படி உயர்வையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x