ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!


ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஹெராத் மாகாணத்தில் 6.3 என்ற ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் அந்தப்பகுதியே உருக்குலைந்து போனது. நிலநடுக்கம், 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலையில், தொடர்ச்சியாக 8 முறை அதிர்வு ஏற்பட்டது.

இதனால் உயர்ந்த கட்டடங்களில் இருந்த பலரும் அலறியடித்தபடி வெளியேறி, தெருக்களில் தஞ்சமடைந்தனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட முதல் நாளிலேயே 2 ஆயிரம் பேர் உயிரிழந்தது தெரிய வந்தது.

ஹெராத் மாகாணத்தில் உள்ள 20 கிராமங்களில் இருந்த 1,983 வீடுகள் அழிந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை தற்போது 4 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

தேசிய மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 35 குழுக்கள் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் உலக சுகாதார அமைப்பு பணம், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போதும் அதே போன்ற சோகம் நிகழ்ந்துள்ளது.

x