35 மீனவர்களை விடுவிக்க கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்


ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன்வடக்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 6-ம் தேதி 4 நாட்டுப்படகுகளில் 35 மீனவர்கள் கடலுக்குமீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறி, 4 நாட்டுப்படகுகளையும் கடந்த 8-ம் தேதி இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

மீனவர்கள் கைது செய்யப்பட்டு, புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது அனைவரும் வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 35 மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று பாம்பன் அன்னை வேளாங்கண்ணி ஆலய வளாகத்தில் மீனவ பிரதிநிதி டேவிட் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், நாளை(இன்று) மீண்டும் கூட்டம் நடத்தி போராட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதுகுறித்து பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் டெல்லியிலிருந்து செல்போனில் தொடர்புகொண்டு ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள படகுகள், மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை தமிழக மீனவ பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம்.

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி 4நாட்டுப்படகுகளை சிறைபிடித்து, அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

முதல்வர் கடிதம்: மத்திய வெளியுறவுத் துறைஅமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திடவும், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திடவும் வலுவான தூதரகநடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். கடலோர மீனவ சமுதாயத்தினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து, தாயகத்துக்கு அழைத்து வருவதை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில்கேட்டுக் கொண்டுள்ளார்.

x