கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவில் விவசாயிகள் மலர்சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, ராயக் கோட்டை, உத்தனப்பள்ளி மற்றும் பாகலூர் பகுதியில் ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி, மல்லிகைப்பூ மற்றும் பல்வேறு வகையான அலங்கார மலர்களை ஆண்டு முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்து வருகின்றனர்.
குறிப்பாக, சாமந்திப்பூ சுமார் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பூவைப் பொறுத்தவரை தீபாவளி, ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி மற்றும் வரலட்சுமி பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் தேவை அதிகரிக்கும். இதை மையமாக வைத்து அதிக பரப்பளவில் விவசாயிகள் சாமந்திப்பூவை சாகுபடி செய்துள் ளனர்.
மேலும், இங்கு அறுவடை செய்யப்படும் சாமந்திப்பூக்கள் பெங்களூரு, ஹைதராபாத், புனே, சூரத், மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. குறிப்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களுக்கு அதிகளவில் விற்பனைக்குச் செல்கிறது.
இதனிடையே, வரும் 16-ம் தேதி வரலட்சுமி நோன்பு, செப்டம்பர் 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி, 15-ம் தேதி ஓணம் பண்டிகை என அடுத்தடுத்து பண்டிகைகள் வரும் நிலையில், சாமந்திப்பூவின் தேவை சந்தையில் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி யைச் சேர்ந்த மலர் விவசாயி பழனிவேல் மற்றும் சிலர் கூறும்போது, ‘‘பண்டிகை நாட்களில் சாமந்திப்பூ ஒரு கிலோ ரூ.250-க்கு மேல் விற்பனையாகும். தற்போது, நல்ல மழை பெய்துள்ளதால், மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வரும் நாட்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், சந்தையில் நல்ல விலையும் கிடைக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.