உதயநிதி துணை முதல்வரானால் தமிழகத்தில் பாலாறும் தேனாறுமா ஓடப் போகிறது? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி 


ஆர்.பி.உதயகுமார்

மதுரை: “உதயநிதி துணை முதல்வரானால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடவா போகிறது?” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றிய அதிமுக சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றியச் செயலாளருமான பா.நீதிபதி தலைமை வகித்தார். உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கி பேசினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இ.மகேந்திரன், க.தவசி, ஏகேடி.ராஜா, மாணிக்கம், கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “பெரியார் அணையில் போதுமான தண்ணீர் உள்ளதால் கடந்த ஆண்டு போல் இல்லாமல் முன்கூட்டியே தண்ணீரை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். குறிப்பாக இந்த பெரியார் பாசனத்தை நம்பி 19,500 ஏக்கர் ஒரு போக பாசன நிலங்களும், 45 ஆயிரம் ஏக்கர் இருபோக பாசன நிலங்களும் உள்ளது.

குறிப்பாக பேரணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கள்ளந்திரி வரையில் செல்கிறது. இதில் மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள். தற்போது உதயநிதி ஒலிம்பிக் போட்டியை பார்க்க பாரிஸுக்கு சென்று விட்டார். உதயநிதிக்கு துணை முதல்வராக சுபமுகூர்த்தம் குறித்து விட்டதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். உதயநிதி துணைமுதல்வராக ஆகிய பின்பு தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடவா போகிறது?. கள்ளச் சாராய ஆறு தான் ஓடும்’’ என்றார்.

x