விநாயகர் சதுர்த்திக்காக கோவையில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்படும்: இந்து முன்னணி


இந்து முன்னணி தலைவர்கள்

கோவை: நடப்பாண்டு விநாயகர் சதுர்த்திக்காக கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட பிரிவின் சார்பில், ‘விநாயகர் சதுர்த்தி’ தின விழா கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், காந்திபார்க் பகுதியில் இன்று (ஆக.10) நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கே.தசரதன் முன்னிலை வகித்தார்.

இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்து பேசும்போது, ‘‘தமிழகம் முழுவதும் நடப்பாண்டு இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி தின விழா வெகு விமர்சையாக நடத்தப்பட உள்ளது. நடப்பாண்டு விநாயகர் சதுர்த்திக்காக இந்து முன்னணி சார்பில், கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன.

அதைத் தொடர்ந்து கோவை மாநகரில் நடத்தப்படும் விசர்ஜன விழா பொதுக்கூட்டத்தில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிராக பிரச்சினைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்துக்களின் உயிருக்கும், உடமைக்கும் தொடர் சேதம் ஏற்படுகிறது. வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 12-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதேபோல், ஆட்டோ தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் சார்பில், வரும் 13-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்து முன்னணியின் மாணவர் அமைப்பான இந்து இளைஞர் முன்னணி சார்பில், வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தை வீர தியாகிகள் தினமாக மாநிலம் முழுவதும் கொண்டாட உள்ளனர்.

அதேபோல், ஆடி மாதம் 5-வது வெள்ளிக்கிழமையான வரும் 16-ம் தேதி காலை, செல்வபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து ஆயிரம் பெண்கள் பங்குபெறும் இந்து அன்னையர் முன்னணியின் ஆடி மாத மஞ்சள் நீர் அபிஷேக விழா நடைபெற உள்ளது’’ என்றார். இந்நிகழ்வில், மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சி.தனபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

x