“புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கட்சி மாறுவது கைவந்த கலை” - நாராயணசாமி கடும் விமர்சனம்


நாராயணசாமி

புதுச்சேரி: “முதல்வர் ரங்கசாமிக்கு கட்சி மாறுவது கைவந்த கலை. அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டும் எனில் கட்சித் தலைமையை அணுக வேண்டும்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு மதத்தின் செயல்பாடுகளில் மற்ற மதத்தினர் தலையிடக்கூடாது. இந்து அறநிலையத்துறை சட்டத்தில் இந்துக்களை தவிர வேறு யாரும் அரங்காவலர் குழுவில் இருக்க முடியாது. அப்படி இருக்கையில் இஸ்லாமியர்களின் வக்ஃபு வாரியத்தில் இந்துக்கள் உறுப்பினர்களாக இருக்கலாம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதை, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இஸ்லாமியர்களை பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஆகவே, வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இண்டியா கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக கட்சி ஆரம்பித்து, பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக கூறிய முதல்வர் ரங்கசாமி, தற்போது இண்டியா கூட்டணி எம்பி-க்கள் மாநில அந்தஸ்துக்காக குரல் கொடுக்க வேண்டும். இண்டியா கூட்டணியின் பலம் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் மத்தியில் உள்ள பாஜக அரசு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டதாக தெரிகிறது. புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் பேசி புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்த திமுக, காங்கிரஸ் எம்பி-க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக முதல்வர் ரங்கசாமி இருக்கிறார். நரேந்திரமோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற சமயத்தில் முதல்வர் ரங்கசாமி, பதவியேற்பு விழாவை புறக்கணித்தார். புதுச்சேரிக்கு நிதி ஆதாரம் பெறுவதற்காகவும், மாநில அந்தஸ்து பெறுவதற்காகவும், வளர்ச்சித் திட்டங்களை பெற கோரிக்கை வைப்பதறகாகவும், எல்லா மாநிலங்களையும் புதுச்சேரியை போல் அழைத்து நிதி ஆயோக் கூட்டம் நடந்த சமயத்தில் முதல்வர் ரங்கசாமி அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

முதல்வர் ரங்கசாமிக்கு, பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு பயம் வந்துவிட்டதா? ஒரு மாநில முதல்வர் மாநிலத்தின் கோரிக்கைகளை, மக்கள் பிரச்சினைகளை பிரதமரிடம் சொல்லித்தான் தீர்க்க வேண்டும். அதுதான் ஒரு முதல்வரின் ஜனநாயக கடமை. ஆனால், ரங்கசாமி அப்படிச் செய்யாமல் அந்தக் கூட்டணியில் இருந்து கொண்டே பிரதமர் பதவியேற்பு விழா, நிதி ஆயோக் கூட்டம் ஆகியவற்றை புறக்கணித்தார். இதில் இருந்து பிரதமரை பார்ப்பதற்கு முதல்வர் ரங்கசாமி பயப்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

சட்டப்பேரவையில் முதல்வர், மின்துறை அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோர் மின்துறை தனியார்மயமாக்கப்படாது எனக் கூறுகின்றனர். ஆனால், நீதிமன்ற வழக்கின் போது மின் விநியோகத்தை தனியாரிடம் வழங்க கால அவகாசம் கோரப்படுகிறது. புதுச்சேரியில் விளம்பர பதாகை பிரச்சினையில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. தலைமைச் செயலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை முதல்வர் பிறந்தநாளுக்கு பதாகை வைத்ததில் துணைபோயுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவும் மீறப்பட்டு, தற்போது புதுச்சேரி தலைமை நீதிபதி உயர் நீதிமன்ற பதிவாளருக்கு பதாகை வைக்க காரணமானோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கடிதம் எழுதியுள்ளார். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வில்லியனூர் பகுதியில் அதிகளவில் விற்கப்படுகின்றன. தற்போது காவல்துறையினரையே தாக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

புதுச்சேரியில் 15 லட்சம் மக்கள் தொகை உள்ள நிலையில், 900-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், பார்கள், ரெஸ்டோ பார்கள் இருப்பது தேவைக்கு அதிகமானதாகும். புதுச்சேரியின் கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் மக்கள் தொகைக்கு ஏற்ப மதுக்கடைகள் அதிகரிக்கப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் பேசியிருப்பது சரியல்ல. முதல்வர் ரங்கசாமிக்கு கட்சி மாறுவது கைவந்த கலை. அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டும் எனில் கட்சித் தலைமையை அணுகவேண்டும். அதுகுறித்து புதுச்சேரி காங்கிரஸ் முடிவெடுக்க முடியாது. தனிப்பட்ட முறையிலும் அவர் இண்டியா கூட்டணிக்கு வருவது குறித்தும் கருத்துக் கூறமுடியாது. கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என்று கூறினார்.

x