ஆவின் பால் கொள்முதல் சில வாரங்களில் அதிகரிக்கும்: மேலாண்மை இயக்குநர் நம்பிக்கை


கோப்புப் படம்

சென்னை: ஆவின் பால் கொள்முதல் சில வாரங்களில் 29 லட்சம் லிட்டராக அதிகரிக்கும் என்று ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் வினீத் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தற்போது தினமும் 27 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு பல வகைகளில் பிரித்து விற்பனை செய்யப்படுகின்றன. இது தவிர வெண்ணெய், நெய், தயிர், மோர் உட்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்களும் ஆவினால் விற்பனை செய்யப்படுகின்றன.

முன்பு, ஆவின் பால் கொள்முதல் தினமும் 40 லட்சம் லிட்டராக இருந்தது. இப்போது படிப்படியாக குறைந்து 27 லட்சம் லிட்டராக இருக்கிறது. பால் கொள்முதல் குறைந்ததால், ஆவினில் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை பாதிக்கும் நிலை உள்ளது. ஆவின் பால் கொள்முதல் சரிவுக்கு நடைமுறை கொள்கை மற்றும் தனியார் கொள்முதலுக்கு சாதகமான அணுகுமுறை ஆகியவை முக்கியக் காரணம் என்றும், எனவே பால் கொள்முதலை அதிகரிக்க ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலத் தலைவர் கே.முகமது அலி தெரிவித்திருந்தார்.

இது குறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் வினீத் கூறுகையில், "ஆவின் பால் கொள்முதல் தற்போது 29 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. மழை காரணமாக, கொள்முதல் அதிகரித்துள்ளதா என்று ஆய்வு செய்கிறோம். இன்னும் சில வாரத்தில் ஆவின் கொள்முதல் 29 லட்சம் லிட்டராக அதிகரிக்கும். ஆவின் கொள்முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாட்டு தீவனம் சலுகை விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.