சென்னை பல்லவன் இல்லம் முன்பாக சாலை மறியலில் குதித்த போக்குவரத்து ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிரடியாக கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இன்று 2வது நாளாக நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் தொமுச உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் பங்கேற்கவில்லை. இதனால் அவர்களை வைத்து தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் நிலையில் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை பல்லவன் இல்லத்தை முற்றுகையிட போவதாக சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் நேற்று அறிவித்து இருந்தார்.
இதனால் சென்னை பல்லவன் இல்லத்தை சுற்றி காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. காவல்துறை இணை ஆணையர் தர்மராஜன் மேற்பார்வையில் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் பல்லவன் இல்லத்தில் 300-க்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பியபடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் 2 குழுவாக பிரிந்து பல்லவன் இல்லம் நோக்கி கூட்டாக பேரணியாக சென்றனர். அப்போது திடீரென தடுப்புகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பல்லவன் பணிமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டதாக சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் வாலாஜா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
துணைமேயரை கொல்ல முயன்றது திமுக வட்டச் செயலாளரா?: மதுரை அரசியலில் பரபரப்பு!
பரபரப்பு... அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திடீர் ராஜினாமா!
இன்று தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம்... தொழிற்சங்கங்கள் அதிரடி!
பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பே உரிமைத்தொகை: வங்கிக் கணக்கில் வரவானதால் மகளிர் மகிழ்ச்சி!