நொச்சிக்குப்பத்தில் ரூ.10 கோடியில் கட்டப்பட்டுள்ள பெரிய மீன் அங்காடி: ஆக.12-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்


சென்னை: மெரினா கடற்கரை அருகில் நொச்சிக்குப்பத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த 366 கடைகளுடன் கூடிய பெரிய மீன் அங்காடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி திறக்கிறார்.

சென்னை மெரினா கடற்கரை அடுத்த, பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையின் இரு புறமும், தற்போது மீனவர்கள் கடை அமைத்து மீன் விற்பனை செய்து வருகின்றனர்.

இரவு நேரத்தி்ல் கரையோரத்தில் பிடிக்கப்படும் மீன்கள் வலையில் இருந்து எடுத்தும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால், வார இறுதி நாட்களில் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கடும் போக்குவரத்து நெரிசல்: மேலும், தற்போது மெரினா கடற்கரை சேவைச் சாலையை ஒட்டிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், வார இறுதி நாட்களில் மெரினா கடற்கரை வரும் பொதுமக்களில் பலர், பட்டினப்பாக்கம் லூப் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு, கடற்கரைக்கு செல்கின்றனர். இதனாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, இப்பகுதி போக்குவரத்து நெரிசலைதவிர்க்கவும், மீனவர்களும் பொதுமக்களும் பயன்பெறும் வகையிலும், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் நவீன மீன்அங்காடி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.

366 மீன் கடைகள்: இதையடுத்து, ரூ.9.97 கோடி மதிப்பில், நொச்சிக்குப்பம் பகுதியில், மீனவர்கள் குடியிருப்புகளுக்கு நடுவில், அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி கட்டுமானப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இப்பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளதால், வரும் ஆக.12-ம் தேதி மீன் அங்காடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளார்.

இந்த நவீன மீன் அங்காடியில் 366 மீன் கடைகள், மீனவர்கள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதிகள், மீன்களை சுத்தம் செய்ய தனியாக 2 பகுதிகள், இந்த அங்காடி வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரித்த பின் வெளியேற்றும் வகையில்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும்வகையில் வாகன நிறுத்தம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் உயர்கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.

x