கும்மிடிப்பூண்டியில் இரு பிரிவினருக்குள் மோதல்: கோயிலுக்கு ‘சீல்’ வைத்து வருவாய்த் துறை நடவடிக்கை


கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது எட்டியம்மன் கோயில். இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோயிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

அப்போது, வழிபாடு செய்வது தொடர்பாக பட்டியலின மக்கள் மற்றும் மாற்று சமூகம் என, இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோயிலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தொடர்ந்து, 2011-ம் ஆண்டு கோயில் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில், 22 ஆண்டுகள் கழித்து, எட்டியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேக விழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்து, திருப்பணிகள் நடைபெற்றன. அந்த திருப்பணிகளுக்கு, பட்டியலின மக்களிடம் பணம் வாங்க, மாற்று சமூகத்தினர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே நடைபெற்ற பிரச்சினையை கருத்தில் கொண்டு வருவாய்த் துறை சார்பில் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில், கும்பாபிஷேக விழாவின்போது, மாற்று சமூகத்தினர் காலை வேளையிலும், பட்டியலின மக்கள் மதிய வேளையிலும் வழிபாடு நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டதால், கும்பாபிஷேக விழாவுக்கு அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, காலை வேளையில் மாற்று சமூகத்தினர் கோயிலில் வழிபாடு செய்தனர். மதிய வேளையில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலை நோக்கி சென்றனர்.

அப்போது, அவர்களை, ‘கோயிலுக்கு செல்லும் வழி பட்டா நிலத்தில் இருப்பதால் நீங்கள் மாற்று வழியில் செல்லுங்கள்’ என, கூறி மாற்று சமூகத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு பிரிவினருக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, பட்டியலின மக்கள், ரெட்டம்பேடு சாலையில் அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைத்தனர். இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படும் என்பதால், நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, திருவள்ளூர் எஸ்பி சீனிவாசபெருமாள், மாற்று சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதில் தீர்வு எடுபடாத நிலையில், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையிலான வருவாய்த் துறையினர் மாற்று வழி ஏற்படுத்த கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், மாற்று பாதைக்கு வாய்ப்பு இல்லை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் கோயிலுக்கு ‘சீல்’ வைத்தனர்.

x