இயந்திரத்தனமாக செயல்பட்டு சொத்துகளை பதிவு செய்ய மறுக்க கூடாது: சார் பதிவாளர்களுக்கு கோர்ட் உத்தரவு


மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த வி.வரத தேசிகாச்சாரியார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: என் சொத்து தொடர்பான வழக்கில் முன்சீப் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் எனக்கு ஆதரவான உத்தரவுவந்துள்ளது. எதிர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சொத்தைப் பதிவு செய்யக் கோரி சார் பதிவாளரிடம் முறைப்பாடு மனு அளித்தேன். சொத்தின் உண்மை நகல் இல்லை என்று கூறி, அதைப் பதிவு செய்ய மறுத்து சார் பதிவாளர் கடந்த ஜூன் 25-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, என் சொத்தைப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வகுமார் வாதிட்டார்.

இதையடுத்து, நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: நீதிமன்ற உத்தரவு நகல்கள் இருந்தும், சொத்தின் உண்மை ஆவணங்கள் இ்ல்லை என்று கூறி, சொத்தைப் பதிவுசெய்ய சார் பதிவாளர் மறுத்துள்ளார். சார் பதிவாளரின் இந்த உத்தரவு நீதிமன்றத்துக்கு கீழ்படியாமையே தவிர, வேறு ஒன்றும் இல்லை.

நீதிமன்ற உத்தரவு இருந்தும்சொத்தின் உண்மை ஆவணங்களை சார் பதிவாளர் கேட்டுள்ளார். சார் பதிவாளர் மேல்முறையீட்டு நீதிமன்றம்போல செயல்பட முடியாது. சார் பதிவாளரின் செயல், நீதிமன்ற அவமதிப்பாகும். இதே சார் பதிவாளர் எதிர்காலத்தில் இப்படி நடந்தால், கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பைச் சந்திக்க வேண்டியது வரும்.

சார் பதிவாளர்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டு சொத்துகளைப் பதிவு செய்ய மறுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில், பதிவுத் துறைஐ.ஜி. கடந்த ஜூலை 12-ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.

அதில், சார் பதிவாளர்கள் இயந்திரத்தனமாகச் செயல்பட்டு, பதிவு செய்ய மறுக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. எனினும்,சார் பதிவாளர் இயந்திரத்தனமாகச் செயல்பட்டு, மனுதாரரின் சொத்தைப் பதிவு செய்ய மறுத்துள்ளார். எனவே, சார் பதிவாளர்பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஒரு வாரத்தில் சொத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்

x