வத்தலகுண்டு அருகே கோயில் விழாவில் விடிய விடிய கிடா விருந்து: நேர்த்திக் கடனாக பலியிடப்பட்ட 2000 ஆடுகள்


திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டியில் நடைபெற்ற கோட்டைகருப்பணசாமி கோயில் விழாவில் நேர்த்திக்கடனாக விடப்பட்ட ஆடுகள்.

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டி கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு கிடா விருந்து நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டியில் ஊருக்கு வெளியே பிரசித்திபெற்ற கோட்டை கருப்பணசாமி கோயில் உள்ளது. இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் சென்று சுவாமி தரிசனம் செய்வர். தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டிக்கொள்வர்.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை அடுத்துவரும் வெள்ளிக்கிழமை கோயில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இதையடுத்து இன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

ஆண்டுதோறும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதையடுத்து நேர்த்திக்கடனாக ஆடுகளை கோயிலுக்கு காணிக்கையாக விட்டுச்செல்வர். இந்த ஆடுகளை கோயில் நிர்வாகமும், விராலிப்பட்டி கிராம மக்களும் பராமரித்து வருவர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டியில் நடைபெற்ற கோட்டைகருப்பணசாமி கோயில் விழாவில் பங்கேற்ற மக்கள்.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த திருவிழாவில் இந்த ஆடுகள் மொத்தமாக பலியிடப்படும். ஏற்கனவே காணிக்கையாக விடப்பட்ட ஆடுகள் ஆயிரத்துக்கும் மேல் இருந்த நிலையில், திருவிழாவின்போது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் கோயிலுக்கு வழங்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை மாலை வரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பெறப்பட்டிருந்தன. இரவு விழாவின் முக்கிய நிகழ்வாக கோட்டை கருப்பணசாமிக்கு காவுகொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக கோட்டை கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து ஆடுகள் அடுத்தடுத்து பலியிடப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட அடுப்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு பலியிட்ட ஆடுகளை வெட்டி சமைக்கத் துவங்கினர்.

சமையல் முடிந்தவுடன் இரவு கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது. கோட்டை கருப்பணசாமிக்கு பலியிட்ட ஆடுகளை கொண்டு சமைத்த உணவை பிரசாதமாக நினைத்து வந்திருந்தவர்கள் உட்கொள்கின்றனர்.

இந்த அசைவ விருந்து விடிய விடிய தொடர்ந்து சூரியன் உதிக்கும் வரை நடைபெறும். இந்த திருவிழாவில் பெண்கள் மாலை வரை மட்டுமே கோட்டை கருப்பணசாமியை வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.

காவுகொடுக்கும் நிகழ்வு துவங்குவதற்கு முன்பு பெண்கள் அனைவரும் கோயிலில் இருந்து சென்றுவிடுகின்றனர். அதன் பின் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்னதான விருந்திலும் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.

அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னர் மீதமுள்ள அசைவ உணவுகளை கோயில் அருகிலேயே மண் அள்ளும் இயந்திரம் மூலம் குழிதோண்டி கொட்டி புதைத்து விடுகின்றனர்.

ஆண்டுக்கு ஒரு முறை ஒரு நாள் மட்டும் கோட்டை கருப்பணசாமி கோயிலில் நடைபெறும் இந்த காவுகொடுக்கும் விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.

x