செங்கோட்டை அரசுப் பள்ளியில் சென்ட் பாட்டில் உடைந்து 7 மாணவிகள் மயக்கம்


தென்காசி: செங்கோட்டை அருகே அரசு பள்ளியில் மாணவி கொண்டு வந்த சென்ட் பாட்டியில் உடைந்து நெடி வெளியேறியதால் 7 மாணவிகள் மயக்கமடைந்தனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பிளஸ் 2 கணினி அறிவியல் படிக்கும் மாணவி ஒருவர் இன்று சென்ட் பாட்டிலை வகுப்பறைக்கு கொண்டு வந்துள்ளார். அப்போது, சென்ட் பாட்டில் கீழே விழுந்து உடைந்துள்ளது. அதிலிருந்து வந்த வாசனை திரவியத்தின் நெடி காரணமாக, 7 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியேறினர்.

மேலும், மயக்கமடைந்த மாணவிகள் உடனடியாக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களில் 5 பேரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.

செங்கோட்டை, விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த முனியப்பசாமி என்பவரது மகள் தாரணி (17), செங்கோட்டையைச் சேர்ந்த காஜா முகைதீன் என்பவரது மகள் ஷாலிகா (17) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து செங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x