சரசரவென 50 அடி தண்ணீர் டேங்கில் ஏறிய கல்லூரி மாணவி... கீழே இறங்க முடியாமல் தவிப்பு!


இளம்பெண் மீட்பு

திருவாரூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சென்னை தனியார் கல்லூரி ஒன்றில், விடுதியில் தங்கி பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இதையறிந்த அவரது பெற்றோர், மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், கும்பகோணம் திருவலஞ்சுழி அருகே உள்ள சாமியார் ஒருவரிடம் அருள் வாக்கு பெற்று, முடி கயிறு போடுவதற்காக, கல்லூரி மாணவியை அவரது பெற்றோர் காரில் நேற்று அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, சாமியார் வருவதற்கு தாமதமாகும் என்று அங்கிருந்தோர் கூறியதால், அருகே உள்ள கோயிலில் காத்திருந்துள்ளனர். திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில், அந்த இளம் பெண் அருகே இருந்த தண்ணீர் டேங்க் மீது ஏறியுள்ளார். சுமார் 50 அடி உயரம் கொண்ட அந்த தண்ணீர் டேங்க் மீது இருந்து கீழே பார்த்த அவருக்கு, உதறல் எடுத்ததோடு பயந்து போனார். இதனால், அவர் கீழே இறங்க முடியாமல் தவித்தார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், அதிர்ச்சி அடைந்து உடனடியாக கும்பகோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் உயரத்தைக் கண்டு தரையிரங்க அஞ்சிய மாணவியின் கண்களை மூடிவிட்டு கயிற்றைக் கட்டி, பத்திரமாக தரை இறக்கி, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீஸார், மாணவி உண்மையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஏறினாரா அல்லது தற்கொலை செய்துகொள்ள ஏறினாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் விபரீத செயலால் அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

x