முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்தா? - கேரள முதல்வர் பினராயி விஜயன் பரபரப்பு பதில்


கேரளா: இடுக்கி மாவட்டத்தில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து உடனடியாக அச்சப்படத் தேவையில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், முல்லைப் பெரியாறு அணைப்பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், எனவே புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இடுக்கி காங்கிரஸ் எம்.பி டீன் குரியகோஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் பேசிய குரியகோஸ், 1895ல் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையை "தண்ணீர் வெடிகுண்டு" என்று குறிப்பிட்டு, அதை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “முல்லைப் பெரியாறு அணைக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் கிடையாது. அது தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஆனால் புதிய அணை என்ற முன்னர் எடுத்த முடிவிலிருந்து கேரளா பின்வாங்காது. இந்த விஷயத்தில் மாநில அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. ஆனால் உடனடியாக அந்த அணைக்கு ஏதாவது நடந்து விடும் என்று கவலை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
” என்று அவர் கூறினார்.

இந்த சூழலில் கேரளா காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஏடன் இன்று மக்களவையில் பேசும்போது, "முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

x