திண்டுக்கல்லில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்


திண்டுக்கல் அருகே நடந்த நிகழ்ச்சியில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை துவக்கிவைத்து மாணவனுக்கு பற்று அட்டையை வழங்கிய அமைச்சர் ஐ.பெரியசாமி.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கிவைத்தார்.

ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் தமிழ்ப்புதல்வன் திட்டம் துவக்க நிகழ்ச்ச்சி நடைபெற்றது. எம்எல்ஏ செந்தில்குமார் முன்னிலையில், திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி, கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்திற்கான பற்று அட்டைகளை வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "கல்விச் செல்வத்தை மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, தமிழக முதல்வர் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட "புதுமைப்பெண் திட்டம்" பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் "தமிழ்ப் புதல்வன்" எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி, கல்வி பயின்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதுடன், நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் மற்றும் உங்களது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும்," என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைக்கு வழங்கப்பட்ட 16 புதிய வாகனங்களை அமைச்சர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

x