திண்டுக்கல்: மதுபானக்கூட சோதனையின்போது பறிமுதல் செய்த பணத்தை வழக்கு பதிவில் குறைத்து காட்டியதாக எஸ்ஐ உட்பட மதுவிலக்கு போலீஸார் 4 பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி-யான அ.பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுக்கா, செங்குறிச்சி கிராமத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே டாஸ்மாக் கடையில் மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த ஜூலை 27- ம் தேதி திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸார் செங்குறிச்சி டாஸ்மாக் கடை பாரில், எஸ்ஐ-யான முத்துக்குமார், போலீஸார் ஜேம்ஸ், மணிகண்டன், கல்யாண்குமார் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை கைப்பற்றினர். டாஸ்மாக் கடை பாரில் எடுக்கப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் பணம் ஆகியவற்றின் விவரங்களுடன் வழக்கும் பதிவு செய்தனர்.
வழக்குப் பதிவின் போது, கைப்பற்றிய தொகையை விட குறைவான தொகையை காண்பித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். இதையடுத்து டாஸ்மாக் கடை பாரில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அதிகமான பணத்தை பறிமுதல் செய்ததும், குறைவான பணத்தை வழக்கில் காட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து மதுவிலக்கு பிரிவு எஸ்ஐ-யான முத்துக்குமார், போலீஸார் ஜேம்ஸ், மணிகண்டன், கல்யாண்குமார் ஆகியோரை திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை பிரிவிற்கு பணியிடமாற்றம் செய்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி-யான அ.பிரதீப் இன்று உத்தரவிட்டார்.