திருவள்ளூர்: சென்னை கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமாக திருவள்ளூர் அருகே உள்ள கல்லறை தோட்டத்தில், உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை - கோயம்பேட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் யாரேனும் உயிரிழந்தால் அவர்களது உடல்களை சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் புதைப்பது வழக்கம். ஆனால், தற்போது அங்கே இடமில்லாததால், கல்லறை தோட்டம் மற்றும் தேவாலயம் அமைக்க, தேவாலயத்தின் அறக்கட்டளை சார்பில், திருவள்ளூர் அருகே தொழுவூர் பகுதியில் கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு சுமார் ஒரு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அந்த இடத்தில் கல்லறை தோட்டம் அமைக்க கடந்த 2020-ம் ஆண்டு தொழுவூர் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என வருவாய்த் துறையினரிடம் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டு, கல்லறை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு தொழுவூர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை- கோயம்பேடு கிறிஸ்தவ தேவாலயத்தில் உறுப்பினராக உள்ள, முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர் நேற்று உயிரிழந்ததால் அவரது உடல் தொழுவூர் கல்லறையில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. இதனையறிந்த தொழுவூர் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று மாலை 6 மணியளவில், ஒன்று திரண்டு, அடக்கம் செய்த உடலை தோண்டி எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“வெளியூர்களில் உயிரிழப்பவர்களின் உடல்களை எங்கள் ஊரில் அடக்கம் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆகவே, அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுக்க வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து, தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது அவர், “கிறிஸ்தவ தேவாலய அறக்கட்டளை சார்பில், உரிய அனுமதி பெற்றுதான் கல்லறை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுக்க முடியாது. இது குறித்து, கிராம மக்கள் சார்பில் புகார் மனு அளித்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது சம்பந்தமாக பிரச்சினை செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையடுத்து, தொழுவூர் பகுதியில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தொழுவூர் பொதுமக்கள், “தொழுவூர் பகுதியில் கல்லறை தோட்டம் செயல்படக் கூடாது. இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்க உள்ளோம்” என தெரிவித்தனர்.