திமுக தலைவர் ஸ்டாலின் தனது கட்சியினருக்கு விடுத்துள்ள எச்சரிக்கை அக்கட்சி வட்டாரத்தில் மட்டுமல்லாது தமிழக அரசியல் வட்டாரத்திலும்கூட பேசுபொருளாகி இருக்கிறது.
ஒரு மாநிலத்தை ஆளும் கட்சி, சர்வ அதிகாரமும் கொண்ட முதல்வர், மிக வலுவான கூட்டணியைக் கொண்டுள்ள கட்சியின் தலைவர் இப்படி கடும் எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு என்ன அவசியம் இப்போது வந்தது என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.
"தேர்தலில் வெற்றி பெறாத தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவதற்கு தயங்கப் போவதில்லை, அவர்கள் கட்சியில் மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில் தயங்கப் போவதில்லை" என்ற ஸ்டாலினின் காட்டமான எச்சரிக்கை, எதிரே களமாட வலுவான கூட்டணி இல்லை என்று சொல்லப்படும் நிலையிலும்கூட தேர்தல் குறித்த பயம் திமுகவுக்கு வந்துவிட்டதோ என்ற கேள்வியை அரசியல் அரங்கில் எழுப்பியுள்ளது.
திமுக சரித்திரத்தில் இப்படி எச்சரிப்பதும், நடவடிக்கை எடுப்பதும் இதுவரை வழக்கத்தில் இல்லாதது. தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளுக்கு குழுவை அனுப்பி, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து தவறுகளை திருத்திக்கொள்ள முனைவதுதான் திமுக இதுவரை கடைபிடித்து வரும் வழக்கம். முதல்முறையாக தற்போதுதான், தோல்வியுற்ற தொகுதியின் மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினின் இந்த எச்சரிக்கையானது திமுகவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் இடையே நீடிக்கும் உட்கட்சி மோதல்களுக்கு முடிவுகட்டும் முயற்சியாகவே தெரிகிறது. திமுகவில் தற்போது மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே ஒரு பெரிய இடைவெளி உருவாகியுள்ளது. ஒவ்வொருவரும் தனித்தனி அதிகார மையங்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் ஒரு சில நபர்களை மட்டுமே நம்பியிருக்கும் அமைப்பாக இருக்கக்கூடாது. உட்கட்சிப் பூசலில் ஒவ்வொருவரும் தங்களது பலத்தை நிரூபிக்க முயல்வார்கள். அது தேர்தல் வெற்றியை பாதிக்கக்கூடிய காரணியாக மாறிவிடும் என்பதுதான் ஸ்டாலினின் அச்சம். அதனால்தான் முன்கூட்டியே இந்த எச்சரிக்கை அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வேலை செய்யவேண்டும், தேர்தல் வெற்றியைக் குவிப்பதில் தான் கட்சியினருக்குள் போட்டியிருக்க வேண்டும் என்பதைத்தான் ஸ்டாலின் தனது தகவலாக தெரிவித்திருக்கிறார்.
பொதுவாகவே திமுக வேட்பாளர்கள் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் கைகாட்டும் நபர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதனாலேயே மாவட்டச் செயலாளர்களுக்கு எச்சரிக்கிறார் ஸ்டாலின். இதில் இன்னொரு காரணமும் இருக்கிறது என்கிறார்கள். தற்போது சட்டமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் தகுந்த ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் தலைமைக்குச் சென்றுள்ளது.
இது கிட்டத்தட்ட எல்லா மாவட்டத்திலுமே நடக்கிறது. அதுபோல, 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான பட்டியலை இறுதி செய்து தலைமைக்கு அனுப்பாமல் சில மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்களாம். இதெல்லாம் தனது கவனத்துக்கு வந்ததாலேயே வார்த்தைகளில் அத்தனை கடுமை காட்டி இருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள்.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றிருப்பதுதான் தற்போது திமுகவுக்கு முன்னால் நிற்கும் பெரும் சவால். ஆளும் கட்சியாக இருப்பதால் இம்முறை 39 தொகுதிகளிலும் தனது கூட்டணியை ஜெயிக்க வைக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு இருக்கிறது. அப்படி வென்றுகாட்டினால் தான் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தங்களால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை திமுக கூட்டணிக்குள் உருவாக்க முடியும்.
இப்படி தொடர் வெற்றிகளை நோக்கி நகரவேண்டுமானால் அதற்கு அரசின் சாதனைகள் மட்டும் போதாது. கட்சியினரின் ஒன்றிணைந்த உழைப்பும் தேவை என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துகொள்ளவே இப்போது அலாரம் அடித்திருக்கிறார்.
தமிழகத்தில் மட்டுமல்ல... தேசிய அளவிலும் இந்தியா கூட்டணியில் தனக்கு இருக்கும் முக்கியத்துவத்தை தக்கவைக்கவும் ஸ்டாலினுக்கு இப்போது நூற்றுக்கு நூறு வெற்றி தேவைப்படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்தே ஒரு கட்சியின் தலைவராக ஸ்டாலின் இந்த எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார்.
இதுகுறித்து திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டானிடம் பேசினோம். “கட்சி நிர்வாகிகள் சரியாக வேலைசெய்ய வேண்டும், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கட்சித்தலைவர் என்ற முறையில் அவர் அறிவுரை வழங்கியிருக்கிறார். அதை ஏற்று நிர்வாகிகள் முன்பைவிட வேகமாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர். மற்றபடி தலைவரின் பேச்சுக்கு வேறு எந்தவிதமான பின்னணியும் கிடையாது. அது கட்சிக்காரர்களுக்கான அச்சுறுத்தலும் இல்லை. தேர்தல் குறித்த பயம் எப்போதுமே திமுகவிடம் இருந்ததில்லை, சொன்னதையும், சொல்லாததையும் செய்து மக்கள் நல அரசை நடத்தும் திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள்” என்றார்.
ஒரு கட்சியின் தலைவருக்கே உரிய நியாயமான எச்சரிக்கை உணர்வுடன் ஸ்டாலின் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஒருவேளை, மக்களவைத் தேர்தலில் எங்காவது திமுக கூட்டணி சரிவைச் சந்திக்குமானால் சொன்னபடி தலைவர் சாட்டையை சுழற்ற வேண்டும் என்பதே அடிமட்ட திமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. அப்படி சுழற்றினால் தான் சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும்!