‘இரட்டை வீடு’ பிக் பாஸ், உலகக் கோப்பைக் கிரிக்கெட் என ஏகப்பட்ட என்டர்டெயினர்கள் வரிசைகட்டும் இன்றைய சூழலில், அதிமுக – பாஜக கூட்டணி விலகல் நாடகம் (!) அவ்வளவு சுவாரசியம் அளிக்கவில்லை என்றும், இறுதி முடிவை அறிவித்த பின்னரும் உறுதியாக இல்லாமல் எதிரிகளில் உதிரிகள் இரண்டு பக்கமும் பேசுவதாக வரும் எபிசோடுகளில் லாஜிக்கே இல்லை என்றும் பார்வையாளர்கள் பங்கம் செய்வதால்… காட்சியை மாற்ற முடிவெடுக்கிறார் - டெல்லி ‘பிக் பாஸ்’.
அதன்படி, பல ‘கணக்கு’களைச் சரிசெய்ய பாஜகவிலிருந்து(!) பிரிந்த அதிமுகவினரை ஒரு வீட்டிலும், ‘கோட்டையைப் பிடிக்க தனியாகத்தான் குதிப்போம்’ என்று தம் கட்டும் தமிழக பாஜகவினரை இன்னொரு வீட்டிலுமாகத் தங்கவைக்க முடிவாகிறது.
அதிமுக வீட்டில், பவா செல்லத்துரை கணக்காகக் கதை சொல்லி களைப்படைய வைத்துக்கொண்டிருக்கிறார் ஜெயக்குமார். அவ்வப்போது சிச்சுவேஷன் சாங் வேறு பாடுவதால், ‘ஏடிஎம்கேயிலிருந்து எலிமினேட் ஆகி டிஎம்கேயில ஐக்கியமாகிடலாமா?’ என்கிற அளவுக்குக் கழக கன்டஸ்டென்டுகள் கலவரமாகிறார்கள்.
பாஜக வீட்டில், கூல் சுரேஷ் போல குதூகலமாக இல்லாமல் குமுறிக்கொண்டே இருக்கிறார் அண்ணாமலை. “ஒரு நிமிஷத்துல டிஃபன் பண்ணிடுவீங்களா? ஒரு நிமிஷம்... ஒரு நிமிஷம்” என்று பிக் பாஸ் கேமராக்களை, பிரஸ் மீட்டுக்கு வந்த செய்தியாளர்களாகக் கருதி அவர் கேட்கும் அறச்சீற்றக் கேள்விக்கு, திமுக ஆட்சி மீதான நம்பிக்கையை இழக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை போல டிஆர்பி ரேட்டிங் எகிறுகிறது.
இதற்கிடையே, ‘தென்னகத்து ஷிண்டே’ எனப் பகிரங்கமாகக் கிசுகிசுக்கப்படும் வேலுமணிக்குப் புது டாஸ்க் தரப்படுகிறது. அவரது ஆதரவாளர்கள் சிலர், பாஜக வீட்டுக்குள் பவ்யமாக நுழைகிறார்கள். அங்கு ‘கோவையிலிருந்து கோபமாக’ வந்திருக்கும் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து ‘மக்கள் பிரச்சினையை’ மனக்குமுறலாக எடுத்துரைக்கிறார்கள்.
“அன்பு நண்பர்களே! உங்களுக்கு இருக்கக்கூடிய வேதனையைச் சொல்லிட்டீங்க. மோதிஜி ஆட்சியில, எல்லா கட்சிகளோடயும் பேசுவோம்… எல்லா வாக்குகளையும் வாங்க பாடுபடுவோம். பேப்பர்ஸெல்லாம் குடுத்தீங்கன்னா பிரைம் மினிஸ்டர்கிட்ட பேச முயற்சிப்பேன். எந்த ‘வோட் பேங்க் மேனேஜர்’னு எழுதிக் கொடுங்க. எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்” என்று அதிகாரத் தோரணையில் ஆறுதல் சொல்கிறார் நிர்மலா.
இந்தத் தகவல் தெரிந்ததும், பிக் பாஸிடம் பிரைவேட்டாக முறையிட கன்ஃபெஷன் ரூமுக்குக் கடுப்புடன் செல்கிறார் எடப்பாடி. “வாங்க! வழக்கம் போல வருத்தத்தோட வந்திருக்கீங்க. அதையெல்லாம் மறந்துடுங்க… அநாவசியமா எதையும் ‘அமல்’படுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்திட வேண்டாம்” என்று அசரீரிக் குரல் அச்சுறுத்துகிறது.
எதற்கும் எளிதில் கலங்கிவிடாத எடப்பாடி, “கூட்டணியில இருக்கலாம்… இல்லாம போகலாம். கூட்டணிக்குள்ளேயே கூட்டம் கூட்டமாப் பிரிஞ்சும் செயல்படலாம். ஆனா, ‘எதிர்க்கட்சிக்காரன் என்ன நினைப்பான்!’ன்னு நினைக்கிற அளவுக்கு நேத்து வந்த தலைவர்கள் நோக வைக்கிறாங்க. அதுவும் நல்லதுக்குத்தான். அவர் பேரைச் சொல்லி வெளியே வந்துட்டோம்... மைனாரிட்டி மக்களோட மனசுல இடம்பிடிக்க ட்ரை பண்றோம். இதுக்கு மேலயும் டிராமாட்டிக்கா சீனை நகர்த்துனா டிஆர்பி குறைஞ்சுடும். தங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை” என்று சமாதானக் குரலில் பேசுகிறார்.
“சரி! இந்த வார எலிமினேஷன் லிஸ்ட்… இதோ உங்கள் பார்வைக்கு” என்று பிக் பாஸ் குரல் உறும… அண்ணாமலை முகம் அதில் தெரிகிறதா என மக்கள் காத்திருக்க… கழக ஆட்சியில் வழக்கம் போல்... கரன்ட் கட் ஆகிறது!