எதிர்வரும் மக்களவைத் தேர்தல் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கான இறுதிப்போர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்திற்கு நேற்று மாலை வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "திருச்சியில் வரும் 26-ம் தேதி 'வெல்லும் ஜனநாயகம்' மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இடதுசாரி கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா என கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் முதல் புள்ளியாக இது அமையும். வரும், மக்களவைத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் நாட்டு மக்களைக் காப்பாற்றும் இறுதிப் போராகும். இதில், இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அதற்கான அச்சாரமாக விசிகவின் வெல்லும் ஜனநாயக மாநாடு இருக்கும்.
பில்கிஸ்பானு வழக்கின் மேல்முறையீட்டில் வெளியான தீர்ப்பு ஆறுதலைத் தருகிறது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு சட்டம், நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும். இதற்காக அண்மையில் விசிக சார்பில் வேண்டாம் இவிஎம், வேண்டும் மீண்டும் வாக்குச்சீட்டு முறை என்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். இந்திய கூட்டணியின் கூட்டம் தமிழகத்திலும் கட்டாயம் நடத்தப்படும்.
விசிக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பதை பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவிக்கப்படும்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.