பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டும் பணிக்கு வந்துள்ளனர். இதனால் பல இடங்களில் பேருந்துகள் சீராக இயங்காததால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தன.
இந்த விவகாரத்தில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இரண்டிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து சங்கங்கள் அறிவித்தன.
இதற்கிடையே சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இருப்பினும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றத் தயாராக இல்லை என்றும், வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
பேச்சுவார்த்தை தோல்வி என்பது தெரிந்தது முதலே பேருந்து சேவை படிப்படியாகக் குறைந்தது. இன்று காலை முதல் பல இடங்களில் வழக்கமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஊர்களில் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடியுள்ளன.
குறிப்பாக நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் சென்னையில் பல இடங்களில் பேருந்துகள் வழக்கம் போலவே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பணிமனைகளில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சென்னை நகரைப் பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் ஒரு சில பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகள் வழக்கம் போலவே இயங்குகிறது. இதற்கிடையே இன்று அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருவதாக எம்டிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.