தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்று இருந்தார்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். முதல்வர் செல்ல இயலாத விழாக்களுக்கு அவரது சார்பில் உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைக்கப்படுகிறார். பல்வேறு நலத்திட்டங்களையும் அவரை வைத்து அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்.
மாவட்ட வாரியாக நடைபெறும் அரசின் ஆய்வுக் கூட்டங்களிலும் அவரே கலந்து கொண்டு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறார். இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் துறை அமைச்சராக இல்லாத நிலையிலும் கூட கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்' குறித்து உயர்நிலைக் குழுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவியேற்றதும் மாவட்ட வாரியாக மக்களின் பிரச்சினைகள் குறித்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் வருகிறார்.
இந்நிலையில் இத்திட்டத்தின் முக்கிய உயர்நிலைக் குழுக்கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார். அவருக்கு முதல்வருக்கு நிகராக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையும் வாசிக்கலாமே...