விழுப்புரம்: சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வரும் 13-ம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில், தமிழகத்துக்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
2023-ல் துபாய் சென்ற முதல்வர் ரூ.6,100 கோடி முதலீடுகளை ஈர்க்க கையெழுத்திட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதல்வர் ரூ.3,440 கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஆனால், இதுவரை ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை. சென்னையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது என்றுதெரியவில்லை. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்பதை தெரிவிக்க வேண்டும்.
வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்பதற்காக திமுக தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது. தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் அரசு வெளியிட்ட தகவல்கள் திரிக்கப்பட்டவை. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. இதை உச்ச நீதிமன்றமும், பாட்னா உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன. எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக வரும் 13-ம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்க வேண்டும்.
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும், பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர்சென்று சேராததற்கு மணல் கொள்ளையே காரணம். எனவே, காவிரி ஆற்றில் உள்ள மணல் குவாரிகளை மூட வேண்டும். பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும்.
தமிழக மீனவர்கள் 3 பேருக்குஇலங்கை அரசு ரூ.40 லட்சம் அபராதம் விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இரு நாட்டு மீனவர்களும் காலங்காலமாக மீன் பிடிக்கும் இடத்தில் தமிழக மீனவர்கள் தடையின்றி மீன் பிடிப்பது தொடர்பாக இரு நாட்டு அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. எனவே, கடும் தண்டனைகளுடன் கூடிய, புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். வக்பு வாரியசட்டத் திருத்தம் குறித்து கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.