சென்னை: மெட்ரோ ரயில் பணிகளால் மழைநீர் வழித்தடங்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க ஐஐடி பேராசிரியர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு சாலைகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளால் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கனமழை பெய்யும்போது வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எத்தனை இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இன்னும் கணக்கிடவில்லை. மெட்ரோ ரயில் நிறுவனமும், வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க மோட்டார் மூலம் நீரை வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு நீர் வழித்தடங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க 5 பேர் கொண்ட தொழில்நுட்ப ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் வருவாய் நிர்வாக ஆணையரக ஆலோசகர் காந்திமதிநாதன், ஐஐடி பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன், மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழக தலைமைப்பொறியாளர் பழனிவேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழு ஒரு வாரத்துக்குள் தங்கள் ஆய்வைத் தொடங்க உள்ளது. அக்குழு அளிக்கும் பரிந்துரைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்படுத்தி, வெள்ளநீரை வெளியேற்றும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறினார்.