காரைக்குடியில் கழிவுநீருக்குள் இயங்கும் தினசரி சந்தை: தொற்று பரவும் அச்சம்


காரைக்குடி தினசரி சந்தையில் புகுந்த கழிவு நீர்.

காரைக்குடி: காரைக்குடி தினசரி சந்தைக்குள் கழிவுநீர் புகுந்த நிலையில், அப்படியே சந்தை நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள், வியாரிகள் தொற்று பரவும் அச்சத்தில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஐந்து விளக்கு அருகே அண்ணா தினசரி சந்தை உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் காய்கறிகளை விற்க வரும் விவசாயிகள், வாங்க வரும் சில்லறை வியாரிகள், பொதுமக்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால், இந்த சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை.

மேலும், சந்தை அருகேயுள்ள குடியிருப்புகள், கடை வீதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் அடைபட்டுள்ளதால், மழைக் காலங்களில், மழைநீருடன், கழிவுநீர் கலந்து தினசரி சந்தைக்குள் புகுந்து விடுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு காரைக்குடியில் பெய்த மழையில் கழிவுநீர் கலந்த மழைநீர் தினசரி சந்தைக்குள் புகுந்தது. இன்று காலை வரை சந்தை பகுதியில் கழிவுநீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் வியாபாரிகள் சிரமமடைந்தனர். மக்களும் தொற்று நோய் அச்சத்துடன் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இது குறித்து தினசரி சந்தை வியாரிகள் கூறுகையில் "மழை பெய்தாலே சந்தைக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. கழிவுநீர் வடியாத நிலையிலேயே அதனருகிலேயே வியாபாரம் செய்கிறோம். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது" என்றனர்.

நகராட்சி அதிகாரிகள் தரப்பில் இது குறித்து கேட்டபோது, “இந்த மார்க்கெட் தற்காலிகமானது தான். சீக்கிரமே இந்த மார்க்கெட் கழனிவாசல் பகுதிக்கு மாற இருக்கிறது. இதற்காக அங்கே அதிநவீன வசதிகளுடன் புதிதாக மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில், தற்காலிகமாக இந்த மார்க்கெட்டில் பெரிய அளவில் எந்த பராமரிப்பையும் மேற்கொள்ள முடியாது” என்றனர்.

x