மதுரை: என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஊர் மதுரை என்று மாமதுரை தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மதுரை நகரின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் மாமதுரை விழா தமுக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இவ்விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்டஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, எம்.பி. சு.வெங்கடேசன், எம்எல்ஏ-க்கள் தளபதி, பூமிநாதன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எல்லாருக்கும் அவரவர் ஊர் பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரியது. ஆனால்,மதுரை மாநகர் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமையானது. நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. ஏறத்தாழ 2,000ஆண்டுகள் வரலாறைக் கொண்டது.
பாண்டிய மன்னர்களின் தலைநகரான மதுரை `ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன்' ஆட்சி செய்த நகரம். தவறு செய்தவன் மன்னனே ஆனாலும், கண்ணகி கேள்வி கேட்ட மண் இது. நீதியைக் காக்க உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம் இது. அனைத்துக் கலைகளும் ஒருங்கே அமையப்பெற்று, பண்பாட்டுச் சின்னமாக கருதப்படும் மீனாட்சி அம்மன் கோயில் உள்ள ஊர்.
1866-ம் ஆண்டிலேயே நகராட்சியான ஊர் இது. சென்னைக்கு அடுத்ததாக 2-வது மாநகராட்சியாக 1971-ம் ஆண்டில் மதுரையைதரம் உயர்த்தினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.
மகாத்மா காந்தி தன்னை அரையாடை மனிதராக மாற்றிக்கொண்ட மதுரைதான், எனது வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது மதுரை மண்ணில்தான். இப்படி மதுரையின்பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம்.திமுகவின்திராவிட மாடல் அரசில் மதுரைமாவட்டத்துக்கு 2 அமைச்சர்களை வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
மாமதுரை விழா வரும் 11-ம்தேதி வரை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, நகரின் முக்கிய சாலைகளில் 1 லட்சம் சதுரடிஅளவில் மதுரையின் சிறப்பு, கலாச்சாரம், பண்பாடு, விளையாட்டு, வரலாற்றைச் சிறப்பிக்கும் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பட்டம் விடுதல், கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ‘யங் இந்தியா' அமைப்பின் மதுரைதலைவர் பைசல் அகமது, மாமதுரைவிழாக் குழுத் தலைவர் விக்ராந்த் கார்மேகம் உள்ளிட்டோர் மாநகராட்சியுடன் இணைந்து செய்துள்ளனர்.