அதிகனமழை, நிலச்சரிவை கணிப்பதில் கூடுதல் கவனம் தேவை: இஸ்ரோ தலைவர் சோம்நாத் கருத்து


சென்னை: நிலச்சரிவு, அதிகனமழை, வெள்ளம்போன்ற இயற்கை பேரிடர்களை கணிப்பதில் நாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் ‘பசியில்லாத உலகம்’என்ற தலைப்பிலான 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள அறக்கட்டளை வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

நிறைவு நாளான நேற்று கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்து பேசியதாவது:

இயற்கை வளங்களை பாதுகாக்கவும், எதிர்கால தேவைக்கான வளர்ச்சியை நோக்கிய பயணத்துக்கும் விண்வெளி தொழில்நுட்பம் உதவிகரமாக உள்ளது. நாம் விண்ணில் செலுத்தும் செயற்கைக் கோள்கள் மூலம் கிடைக்கும் தரவு அடிப்படையில் ஆய்வு செய்து இப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

குறிப்பாக, விவசாயம், வானிலை, பருவநிலை மாற்றத்தின் தாக்கம், இயற்கை வளங்கள் கண்காணிப்பு, கல்வி, சுகாதாரம், தொலைதொடர்பு வசதி, வழிகாட்டுதல் சேவை, பேரிடர் மேலாண்மை, எல்லை பாதுகாப்பு, நகர்ப்புற திட்டமிடல், மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கைக் கோள்களின் பங்களிப்பு முக்கியமானது. இதுதவிர, எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு விண்வெளியிலும் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து தரவுகள் வெளியிடப்படுகின்றன.

தற்போது பருவநிலை மாற்றம்உலக அளவில் பெரும் சவாலாக உள்ளது. அதை எதிர்கொள்வதற் கான ஆய்வுகளிலும் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சுதந்திர தினத்தில் புவி கண்காணிப்புக்கான ‘இஓஎஸ்-8’ செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கு உதவும் வகையில், இரவில் துல்லியமான படங்கள் எடுக்க அதில் உள்ள ஆய்வுக் கருவிகள் உதவும்.

அதேபோல, சிறிய செயற்கைக் கோளில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை எதிர்காலத்தில் மற்றசெயற்கைக் கோள்களிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்குமுன்னோட்டமாக, ‘இஓஎஸ்-8’ செயற்கைக் கோளில் சில புதியதொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுகளைக் கொண்டு, அடுத்தகட்ட தயாரிப்புகள் மேம்படுத்தப்படும். இயற்கை பேரிடர்களில், புயலை கணிப்பதில் நாம் சிறந்து விளங்குகிறோம். ஆனால், நிலச்சரிவு, அதிகனமழை, வெள்ளம் போன்ற பேரிடர்களை கணிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர்சவுமியா சுவாமிநாதன், அறங்காவலரும், விஞ்ஞானியுமான டி.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற் றனர்

x