192 உழவர் சந்தைகளுக்கு விளைபொருள் வரத்தை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்


சென்னை: தமிழகத்தில் இயங்கி வரும் 192 உழவர் சந்தைகளில் விளைபொருட்கள் வரத்தை அதிகரிக்க தோட்டக்கலை, வேளாண் விற்பனை வணிகத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:

விளைபொருட்களை சேமித்து வைத்து உயர்ந்த விலை கிடைக்கும் காலங்களில் விற்க ஏதுவாக, மாநிலம் முழுவதும் 525 சேமிப்புக்கிடங்குகள் உள்ளன. நடப்பாண்டில் இதுவரை ரூ.3,225 கோடி மதிப்புள்ள 9.63 லட்சம் டன் வேளாண் பொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

பொருளீட்டுக்கடனாக விவசாயிகளுக்கு ரூ.22.13 கோடியும், வணிகர்களுக்கு ரூ.1.68 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. சந்தை செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் வகையில் 157 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறதுமேலும், 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

விவசாயிகளுடன் அலுவலர்கள் நல்ல தொடர்பில் இருந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்துஅடிப்படை வசதிகளை செய்யவும்,விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு பொருளீட்டுக் கடன் அதிகமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கிராமசபைக் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இத்துறையின் செயல்பாடுகளை விளக்க வேண்டும்.

சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்கள் கூட்டாகபயிர் சாகுபடி திட்டம் தயாரித்துஅதற்கு தேவையான இடுபொருட்களை மலிவு விலையில் பெற்றுஉற்பத்தி செய்யும் விளைபொருட்களை ஒருங்கிணைத்து நல்ல விலைக்கு விற்பனை செய்யவும், விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யவும் 397 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இயங்கி வரும் 192 உழவர் சந்தைகளில் விளைபொருட்கள் வரத்தை அதிகரிக்க தோட்டக்கலை, வேளாண் விற்பனை வணிகத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பைக் குறைக்கவும், விவசாயிகளை பெரும் சந்தைகள், பதப்படுத்துவோர் மற்றும் நுகர்வோர்களுடன் ஒருங்கிணைக்கவும், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற அழுகும் பொருட்களுக்கான விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தவும், 275 குளிர்பதன கிடங்குகளை விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சீரிய முறையில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வேளாண்துறை செயலர் அபூர்வா, வேளாண் வணிகத்துறை ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x