சவுக்கு சங்கருக்கு எதிரான 17 வழக்குகள் தொடர்பாக விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு: ஆட்கொணர்வு மனு மீது இன்று தீர்ப்பு


சென்னை: யூ-டியூபரான சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட 17 வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என்பது குறித்து விளக்கமளிக்க காவல்துறைக்கு 3 வார கால அவகாசம் வழங்கியுள்ள உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து விடுவிக்கக் கோரும் ஆட்கொணர்வு மனு மீது இன்று காலை தீர்ப்பளிக்கவுள்ளது.

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூ-டியூபரான சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக அவர் மீது சென்னை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி என தமிழகம் முழுவதும் 16 காவல் நிலையங்களில் இதே குற்றச்சாட்டுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கக் கோரி சவுக்கு சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒரே குற்றச்சாட்டுக்காக 17 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீஸார் அந்த வழக்கு விசாரணைக்காக ஊர், ஊராக தன்னை அழைத்துச்சென்று அலைக்கழித்து வருகின்றனர் என்றும், எனவே அந்த 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும், மேலும் அந்த வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பில், சில வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், சில வழக்குகளில் இன்னும் போலீஸாரால் கைது செய்யப்படவில்லை என்றும், எனவே கைது செய்யப்படாத வழக்குகளில் தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

`சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்டுள்ள இந்த 17 வழக்குகளும் ஒரே குற்ற சம்பவத்துடன் தொடர்புடையதா என்பதை சரிபார்க்க வேண்டியுள்ளதால் அதற்கு அவகாசம் வழங்க வேண்டும்' என காவல் துறை தரப்பில், கோரப்பட்டது.

அதையேற்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், 17 வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என்பது குறித்து காவல்துறை தரப்பில் விளக்கமளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

இதற்கிடையே, சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து அவரை விடுவிக்கக்கோரி அவரது தாயார் கமலா தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு, அந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பளிக்க உள்ளனர்.

x