சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடுவதை தடுக்க முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி


உச்ச நீதிமன்றம்

சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை பீகார் அரசு வெளியிடுவதைத் தடுக்க முடியாது என்று மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், மாநில அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி அளித்த பாட்னா உயர் நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 1 உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டீல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த விவகாரத்தை 2024-ம் ஆண்டு ஜனவரிக்கு பட்டியலிட்டுள்ளது. மேலும், இந்த மனு மீது 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பீகார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சாதிவாரி கணக்கெடுப்பின் தகவல்கள் சேகரிக்கப்படவில்லை என்றும், கணக்கெடுப்புக்கான விவரங்களைச் சேகரிப்பதில் முறையான நோக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

சில தகவல்களை பீகார் அரசு வெளியிட்டதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதால், கூடுதல் தகவல்களை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் ஆட்சேபனையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 'இந்த நேரத்தில் நாங்கள் எதையும் நிறுத்த முடியாது. மாநில அரசோ அல்லது எந்த அரசோ கொள்கை முடிவு எடுப்பதில் நாங்கள் தலையிட முடியாது. அது தவறாக முடியும்' என்று உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

மனுதாரர்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அப்ரஜிதா சிங், இந்த விவகாரத்தில் தனியுரிமை மீறப்பட்டிருப்பதாகவும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தவறானது என்றும் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், "எந்த ஒரு தனிநபரின் பெயர் மற்றும் மற்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதனால், தனியுரிமை மீறப்பட்டுள்ளது என்ற வாதம் தவறானது" என்று தெரிவித்தனர்.

பிஹார் கிராமம் ஒன்றில் சாதிவாரி கணக்கெடுப்பு

முன்னதாக, பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அம்மாநில அரசு அக்டோபர் 2-ம் தேதி வெளியிட்டது. அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மாநில மக்கள் தொகையில் 63 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

x