தீர்வு ஏற்படுமா? போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை!


போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அரசு போக்குவரத்து

போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தன.

அதையடுத்து, ‘வேலை நிறுத்தபோராட்டத்தினை கைவிடவும்’ எனக்கோரி தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக தேனாம்பேட்டையில் டிசம்பர் 27ம் தேதி தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் நல ஆணையர், போக்குவரத்துக் கழகங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியோரை கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் அந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பின் மீண்டும் இரண்டாம் கட்டமாக ஜனவரி 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதுவும் சமரசத்தில் முடியவில்லை. இப்படி பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததால் ஜனவரி 9ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் மீண்டும் அறிவித்தன.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி போக்குவரத்துக் கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், சென்னை பல்லவன் இல்லத்தில் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற்றது. இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாநகர் போக்குவரத்துக் கழக மேலான் இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சு வார்த்தையிலும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இன்று பகல் 12 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்திற்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்படுகிறது.

x