கனமழை எதிரொலியாக சென்னை புத்தகக்காட்சி இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (டிசம்பர் 07) முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜனவரி 3ம் தேதி சென்னை நந்தனத்தில் தொடங்கிய 47வது புத்தகக் காட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாள்தோறும் ஏராளமான வாசகர்களுக்கு தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். வாசகர்களுக்கு ஏதுவாக 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனையடுத்து, ’’சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களுக்காக இன்று 08/01/2024 ஒரு நாள் மட்டும் புத்தகக் காட்சிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது’’ பபாசி அறிவித்துள்ளது.