ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள்; மாநிலக் கட்சிகளால் கழட்டி விடப்படுகிறதா காங்கிரஸ்?


இந்தியா கூட்டணி

இந்தியாவை 60 ஆண்டுகள் கட்டியாண்ட கட்சியான காங்கிரசின் தற்போதைய நிலையை நினைத்தால் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது. மாநில அளவில் வலுவாக இருக்கும் கட்சிகள் அக்கட்சிக்கு இடம் ஒதுக்குவதில் கறார் காட்டுவதால் நாடு முழுவதும் கட்டமைப்பை வைத்துள்ள காங்கிரஸ், பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகளின் மனம் கோணாமல், கொடுத்ததை வாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளிடம் காங்கிரஸ் காட்டிய பிடிவாதமே இப்போது அதற்கு எதிராக திரும்பி நிற்கிறது. மத்தியப்பிரதேச பேரவை தேர்தலில் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் கேட்டபடி ஒற்றை இலக்கத்தில் அவர்களுக்கு இடங்களை விட்டுக் கொடுத்திருந்தால் இப்போது உபியில் அவர்களிடம் கம்பீரமாக தொகுதிகளை கேட்டு நெருக்கலாம் காங்கிரஸ்.

அகிலேஷ் யாதவ்

ஆனால் மபி-யில் தங்களுக்கே வெற்றி வாய்ப்பு என்ற அசாத்திய நம்பிக்கையில் கூட்டணிக் கட்சிகளிடம் காங்கிரஸ் கெடுபிடி காட்டியது. விளைவு, உபியில் அனைத்துத் தொகுதிகளிலும் நாங்கள் தனித்தே போட்டி யிடுவோம் என்று அகிலேஷ் யாதவை அறிவிக்க வைத்துவிட்டது.

பீகாரிலும் காங்கிரசுக்கு நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் பீகாரில் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ், தற்போது அங்கு 10 தொகுதிகளை கேட்கிறது. இதற்கு ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சம்மதிக்கவில்லை. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தலா 17 தொகுதிகளில் இரண்டு கட்சிகளும் போட்டியிட விரும்புகின்றன. எஞ்சிய 6 தொகுதிகளைத்தான் காங்கிரசும் இடதுசாரிகளும் பங்கிட்டுக்கொள்ள வேண்டிய நிலை. மிஞ்சிப்போனால் இன்னும் இரண்டு மூன்று தொகுதிகளை வேண்டுமானால் கூடுதலாக காங்கிரசுக்கு அக்கட்சிகள் ஒதுக்கலாம்.

உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மொத்தம் 48 தொகுதிகள். இதில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி 23 தொகுதிகளில் தாங்கள் போட்டியிட விரும்புவதாகவும், காங்கிரசுடனான தங்களின் பேச்சுவார்த்தையை ’பூஜ்ஜியத்தில்’ இருந்து தொடங்க வேண்டும் என்றும் ஓலை வாசித்திருக்கிறது.

மேற்குவங்கத்திலும் இதே தான் நிலைமை. ஏற்கெனவே அங்கு இரண்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ள நிலையில், “மாநில கட்சிகள் கொடுக்கும் இடங்களை காங்கிரஸ் வாங்கிக் கொள்ள வேண்டும்” என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்திலேயே மம்தா அழுத்தமாகச் சொல்லிவிட்டார். அங்கே ஒற்றை இலக்கத்தில் தான் காங்கிரசுக்கு தொகுதிகளை ஓகே பண்ணும் மனநிலையில் இருக்கிறார் மம்தா.

மம்தா பானர்ஜி

தமிழ்நாட்டிலும் காங்கிரசுக்கு சிக்கல் எழுந்திருக்கிறது. இங்கு திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைவது உறுதியாகி இருக்கிறது. பாமகவும் திமுக கூட்டணிக்கு வந்தாலும் வியப்பில்லை என்கிறார்கள். புதிய கட்சிகளின் வரவால் காங்கிரஸ் கட்சிக்கு முன்பு ஒதுக்கிய தொகுதிகளின் எண்ணிக்கையில் திமுக நிச்சயம் கைவைக்கும்.

முதல்வர் ஸ்டாலின்

இம்முறை திமுகவிடம் 15 தொகுதிகளுக்கு அடிபோட்டு 10 தொகுதிகளைப் பெற்றுவிட முடியும் என காங்கிரஸ் நினைத்தது. ஆனால், பாமக, மய்யம் வரவுகளால் அந்த எண்ணத்தில் பலத்த அடி விழுந்திருக்கிறது. காங்கிரசுக்கு 5 தொகுதிகள் தரலாமா... 6 தொகுதிகள் தரலாமா என திமுகவில் திண்ணைப் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் தலைவர்கள்

தேசம் தழுவிய அளவில் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய இக்கட்டான சூழலை காங்கிரஸ் கட்சியும் நன்கு உணர்ந்தே இருக்கிறது. அதனால் தங்களுக்கு பிரயோஜனப்படக்கூடிய இடங்களில் மட்டும் மாநிலக் கட்சிகள் தரும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு போட்டியிடும் மனநிலைக்கு வந்திருக்கும் அந்தக் கட்சி, மற்ற மாநிலங்களில் சுமார் 290 இடங்களில் தனித்தே போட்டியிடும் ’பி பிளானுடன்’ இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஜோதிமணி

தாங்கள் பலவீனமாக உள்ள மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளிடம் 85 தொகுதிகளையாவது பெற்றுவிட நினைக்கும் காங்கிரஸ், அந்தத் தொகுதிகள் குறித்து மட்டுமே கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சு நடத்த முடிவு செய்திருக்கிறது. ஆக, தங்களுக்கு செல்வாக்குள்ள மாநிலங்களில் 290 தொகுதிகளில் தனித்தும், கூட்டணிக் கட்சிகளை நம்பி 85 தொகுதிளிலும் போட்டியிடுவது என்பதுதான் காங்கிரசின் பி பிளான்.

இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் எம்பி-யான ஜோதிமணி, “இந்தியா கூட்டணியில் காங்கிரசுக்கு பல மாநிலங்களில் ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதெல்லாம் பிஜேபியால் பரப்பப்படும் பொய்ச் செய்திகள். அந்தந்த மாநிலங்களில் காங்கிரசுக்கு உரிய அளவில் அங்குள்ள கட்சிகள் இடங்களை ஒதுக்கத் தயாராக உள்ளன. தமிழ்நாட்டிலும் அதேபோலத்தான்.

பஞ்சாப், ஹரியாணா, சத்தீஸ்கர் உத்தராஞ்சல், ஆந்திரம், மத்தியப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் மட்டும்தான் இருக்கிறது. அங்கெல்லாம் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் தான் போட்டியிட்டாக வேண்டும்; போட்டியிடப் போகிறது. அந்த வகையில், 290 தொகுதிகள் மட்டுமல்ல... அதற்கு மேலும் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் நேரடியாக போட்டியிட வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

கூட்டணிக் கட்சிகள் தங்களைக் கைவிட்டாலும் அதை சமாளிக்கும் மாற்றுத்திட்டத்துடன் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகிறது காங்கிரஸ். ஆனால், ரிசல்ட்..?

x