மதுரை: மதுரை காமராஜர் பல்கலைகழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கப்படாததால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் நிர்வாகத்தில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணன் அவரது பதவிக்காலம் முடிவதற்குள் திருவாரூரிலுள்ள மத்திய பல்கலைக்கு துணைவேந்தர் வாய்ப்பு கிடைத்து ஒராண்டுக்கு முன்பே சென்றார். அதன்பிறகு இப்பல்கலைக் துணைவேந்தராக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜெ.குமார் நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் இன்னும் 11 மாதங்கள் இருந்த நிலையில், மே 13ம் தேதி உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் ராஜினாமா செய்தார். துணைவேந்தர் இல்லாத காலத்தில் பல்கலைக் நிர்வாகத்தை கவனிக்க, தற்காலிகமாகக கன்வீனர் குழு அமைப்பது வழக்கம்.
இதன்படி, கடந்த 2 மாதத்திற்கு முன்பு கல்வியியல் துறை அரசு செயலர் கார்மேகம் தலைமையில் 3 பேர் கொண்ட கன்வீனர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் பல்கலை நிர்வாகத்தை கவனிக்கின்றனர். இருப்பினும் நிதி, தேர்வு உள்ளிட்ட முக்கிய கோப்புகளை கையாள்வதிலும் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல் (சர்ச் கமிட்டி) குழுவை விரைவில் அமைக்க வேண்டும் என பேராசிரியர்கள், அலுவலர்கள் தரப்பில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இது தொடர்பாக பேசிய பல்கலைக். பேராசிரியர்கள்,"பொதுவாக துணைவேந்தர் இல்லாத காலத்தில் நிர்வாகம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் சிக்கல் இருக்கும். கன்வீனர் குழு நிர்வாகத்தை நன்கு கவனித்தாலும், சில முக்கிய நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள் ஓய்வூதியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது.
ஒரு சில மாதங்கள் தவிர, பிற மாதங்களில் 80 சதவீத ஊதியம், ஓய்வூதியம் உயர் கல்வித்துறை மூலமே பெறும் சூழலில் பல்கலைக்கு தேவையான நிதியை அதிகரிப்பதில் உரிய முயற்சியை எடுக்கப்படவில்லை. கடந்த ஜூலை மாதத்துக்கான ஊதியம், ஓய்வூதியம் இன்னும் கிடைக்கவில்லை. பல்கலைக்கழகம் குறித்த முக்கிய நடவடிக்கைகளை தொய்வின்றி மேற்கொள்ள புதிய துணைவேந்தர் அவசியம்.
தேடல் குழுவில் இடம்பெறும் சிண்டிகேட், செனட் பிரதிநிதிகளை தேர்தல் மூலமும், ஆளுநர் பிரதிநிதி ஒருவரும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் ஆளுநர் தரப்பு பிரதிநிதியை நியமிப்பதில் சர்ச்சை இருப்பதால் தாமதம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. எதுவானலும், பேராசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி புதிய துணைவேந்தரை நியமிக்க, அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.