இந்தத் தொடரில் இதுவரை வறண்ட கானகத்தைத் தரிசித்தோம், ஈர இலையுதிர் காட்டில் உலா வந்தோம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீர்நிலையில் பரிசல் பயணமும் சென்று வந்தோம். இந்த வாரம் சற்றே வித்தியாசமான அனுபவத்தைப் பெற சதுப்பு நிலக் காட்டுக்குள் தடம் பதிப்போம்.
நன்னீரும் கடலின் உவர் நீரும் சேரும் இடங்களில்தான் சதுப்புக் காடுகள் உருவாகின்றன. இதை அலையாத்திக் காடுகள் என்றும் சொல்கிறார்கள். இந்தியாவில் 4,482 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சதுப்பு நிலங்கள் இருக்கின்றன. புயல், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது இத்தகைய சதுப்பு நிலங்கள் இயற்கை அரணாகத் திகழ்கின்றன. சதுப்பு நில மரங்களின் வேர்கள் ஆக்ஸிஜனுக்காகத் தண்ணீருக்கு வெளியில் படர்ந்திருக்கும். கீழே ஈட்டி போன்ற வேர்கள் இருக்கும். இவற்றின் தன்மை பறவைகள் கூடுகள் அமைக்க ஏதுவானதாக இருப்பதாலேயே வெளிநாடுகளிலிருந்து பறவைகள் இங்கு இடம்பெயர்ந்து வருகின்றன.
உலகிலேயே மிகப் பெரிய சதுப்பு நிலப் பகுதியான சுந்தரவனத்தைப் பெற்ற நம் தேசத்தில், சிறு சிறு சதுப்பு நிலப் பகுதிகளும் இல்லாமல் இல்லை. தமிழகத்தில் சதுப்பு நிலம் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிதம்பரம் அருகில் உள்ள பிச்சாவரமே. ஆனால், பலரும் அறிந்திராத இன்னொரு சதுப்பு நிலப் பகுதியும் தமிழகத்தில் உண்டு. அது, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே இருக்கும் காரங்காடு சதுப்பு நிலப் பகுதி.
2018-ல், மன்னார் வளைகுடா பல்லுயிர்ப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சூழல் இணக்கச் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்ட காரங்காடு பகுதிக்கு இந்த வாரம் பயணப்படுகிறோம்.
எப்போது செல்லலாம்?
மழை, காற்று சீஸனைத் தவிர்த்து மற்ற பருவங்களில் தாராளமாகக் காரங்காட்டுக்குச் செல்லலாம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் பயணப்பட்டால் பல்வேறு பறவைகளையும் பார்த்தவாறு காரங்காட்டை ரசிக்கலாம். படகுச் சவாரி, ஸ்நோர்கெலிங் (Snorkeling- கடலில் மூழ்கி ஜெல்லி மீன்கள், கடல் பாசிகள் போன்ற உயிரினங்களைக் காணுதல்), கண்காணிப்பு கோபுரம் மீதேறி கடலை ரசித்தல் என குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாகச் செலவழிக்க உகந்த இடம் இது.
அனுபவக் குறிப்பு
காரங்காடு சதுப்பு நிலப் பகுதிக்குச் சென்றுவந்த இளைஞர் பைஜூ, தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
“பிச்சாவரம், முத்துப்பேட்டை போன்ற சதுப்பு நிலங்களுடன் ஒப்பிடும்போது காரங்காடு மிகச் சிறியதுதான். ஆனால், இங்கும் வெளிநாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வரும் பறவைகள் நிறைந்து காணப்படும். பெயின்டட் ஸ்டோர்க், ஓபன் பில் ஸ்டோர்க், ஸ்பூன் பில், ஒயிட் ஐபிஸ், பிளாக் ஐபிஎஸ் எனப் பல அரிய வகைப் பறவைகளைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 25 வகை வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வந்து செல்வதாக வனத் துறை அதிகாரிகள் கூறினர். பறவைகள் ஆர்வலர்களுக்கு காரங்காடு சிறந்த தேர்வு என்பேன்.
இயற்கை சார்ந்த இடங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்பவன் என்ற வகையில், சூழல் இணக்கச் சுற்றுலா குறித்து முன்பைவிட இப்போது அதிக அளவில் விழிப்புணர்வு வந்துள்ளது என்றே கருதுகிறேன். ஒவ்வொரு தனி நபருமே சூழலியல் செயற்பாட்டாளராக இருக்க வேண்டிய அவசியமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சூழல் இணக்கச் சுற்றுலாவை வெற்றிகரமாக நிகழ்த்துவது அரசாங்கத்தின் கைகளில்தான் இருக்கிறது. இயற்கைக்கு அழுத்தம் ஏற்படாமல் அதைச் செய்தாக வேண்டும்" என்கிறார் பைஜூ.
சூழல் இணக்கச் சுற்றுலாவின் அடிப்படை, பொழுதுபோக்கு அல்ல; விழிப்புணர்வுதான். நாம் வாழும் பூமி எப்படி இயங்குகிறது என்பதைப் பல்வேறு சூழல் மண்டலங்களுக்கும் சென்று அறிந்துகொள்வது நம் அடிப்படைக் கடமை. அடர்வனம், கடல், மலைகள், பாலைவனங்கள்,சதுப்பு நிலங்கள் என ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு சூழல் மண்டலங்களைச் சார்ந்தவை. அவற்றின் தன்மையை அறிந்துகொண்டால்தான் அவற்றின் மகத்துவம் மனிதனுக்குப் புரியும். இயற்கையைச் சிதைக்கக்கூடாது என்ற எண்ணமும் உருவாகும்.
பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்
சூழல் இணக்கச் சுற்றுலாவின் முக்கிய நோக்கங்களில் உள்ளூர் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதும் ஒன்று. எனினும், அது அவர்களின் பாரம்பரியத் தொழிலை முடக்கி, எளிய சம்பாத்தியத்துக்கு முழுமையாகப் பழக்கப்படுத்துவதாக மாறிவிடக்கூடாது என்றும் பைஜூ சுட்டிக்காட்டுகிறார்.
“உதாரணத்துக்கு, காரங்காட்டில் உள்ளூர் மீனவப் பெண்கள் பாரம்பரிய முறையில் மீன் பிடிப்பார்கள். கடலுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத மீன்பிடி முறை அது. ஒருவேளை, சூழல் இணக்கச் சுற்றுலாவுக்காகப் படகை இயக்குவது, பயணிகளுக்குச் சமைத்துக் கொடுப்பது போன்றவற்றில் வரும் வருமானமே போதும் என அப்பெண்கள் பழகிவிட்டால் அந்தப் பாரம்பரிய மீன்பிடி முறை மறைந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. இயற்கைக்கும், இயற்கையோடு இயைந்து வாழ்பவர்களுக்கும் எந்தவித அழுத்தமும் ஏற்படாத வகையில் சூழல் இணக்கச் சுற்றுலா கட்டமைக்கப்பட வேண்டும்” என்றார் அவர்.
காரங்காடு பயண பேக்கேஜ்
காரங்காடு சூழல் இணக்கச் சுற்றுலாவின் தலைவராக இருக்கும் ஜெரால்டு மேரி, இந்தச் சதுப்பு நிலத்தின் சிறப்புகளைப் பட்டியலிடுகிறார்.
“கடல் தரும் அலாதியான அமைதியை முழுமையாக அனுபவிக்க விரும்புபவர்கள் வர வேண்டிய இடம் காரங்காடு. காரங்காட்டில் காலை 9 மணி முதல் 3 மணி வரையே அனுமதி வழங்கப்படும். இங்கே படகுப் பயணம், துடுப்புப் படகு பயணம் மற்றும் ஸ்நோர்கெலிங் செய்யலாம். ஒரு மணி நேரம் ஸ்நோர்கெலிங் செய்ய 200 ரூபாய் வாங்குகிறோம். அதற்கான சுவாசப் பாதுகாப்பு உபகரணங்களை நாங்களே தருகிறோம். ஆனால், பகல் 12 மணி வரையே ஸ்நோர்கெலிங் செய்ய முடியும். அதன் பின்னர் காற்றின் போக்கு மாறுவதால் கடல் நீர் கலங்கிவிடும்.
படகுச் சவாரிக்கு பெரியவர்களுக்கு 100 ரூபாயும் சிறியவர்களுக்கு 50 ரூபாயும் வசூல் செய்கிறோம். கல்விச் சுற்றுலாவாக இருந்தால் கல்லூரி மாணவர்களுக்கும்கூட 50 ரூபாய் மட்டுமே வாங்குகிறோம்.
மன்னார் வளைகுடா பகுதியின் சிறப்புகளில் ஒன்றான கடல் பசுக்கள் தற்போது அருகிவருகின்றன. அதன் நினைவாகவே இங்குள்ள கண்காணிப்பு கோபுரம் அமைந்துள்ள பகுதிக்கு ‘கடற்பசுத் தீவு’ எனப் பெயர் வைத்திருக்கிறோம். 40 அடி உயர கண்காணிப்பு கோபுரத்திலிருந்து காரங்காட்டின் அழகை, கடலின் எழிலை ரசிக்கலாம்” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் ஜெரால்டு மேரி.
இப்பகுதியில் ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மீனவ மக்களே உணவு சமைத்துத் தருகின்றனர். நீங்கள் காரங்காடு வருவதற்கு முன்னதாகவே 7598711620 என்ற எண்ணில் தொடர்புகொண்டு சொல்லிவிட்டால், ‘மீன் காம்போ மீல்ஸ்’ ரெடியாக இருக்கும். ஒரு ப்ளேட்டின் விலை 120 ரூபாய் தான்!
காரங்காடு சதுப்பு நிலப் பயணம் உங்களைப் பரவசப்படுத்தியிருக்கும் என்ற நம்பிக்கையோடு, அடுத்த வாரம் பாலைவனப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறோம். ஆம், நம் பயண எல்லைகள் தமிழகம் தாண்டியும் விரியத் தொடங்குகின்றன.
படங்கள் உதவி: எச்.பைஜூ
(பயணம் தொடரும்…)
வனமே உன்னை வணங்குகிறேன்: முழு தொடரை வாசிக்க: https://www.kamadenu.in/search#gsc.tab=0&gsc.q=vaname-unnai-vanangukiren&gsc.sort=