கோவை: கோவை ஈஷா அறக்கட்டளையின் 'மண் காப்போம்' இயக்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கான 'அக்ரி ஸ்டார்ட் அப்' திருவிழா ஆகஸ்ட் 15-ம் தேதி நடக்கிறது.
இது தொடர்பாக ஈஷா அமைப்பின் 'மண் காப்போம்' இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கோவையில் இன்று (ஆக.8) செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''ஈஷாவின் 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு திரும்பி விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளை தொழிலதிபர்களாக உருவாக்கும் வகையில் 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா - கனவு மெய்ப்பட வேண்டும்' என்ற பயிற்சி கருத்தரங்கு வரும் 15-ம் தேதி கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் அரங்கில் நடைபெற உள்ளது. விவசாயம் சார்ந்து வெற்றிகரமாக நடைபெறக்கூடிய தொழில்கள் குறித்த விழிப்புணர்வையும், அது சார்ந்த வழிகாட்டுதல்களையும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கும் நோக்கத்தில் இந்த பயிற்சி கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
மேலும், புதிய வேளாண் தொழில் முனைவோர்களை உருவாக்கவும், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில், எவ்வாறு விவசாயம் சார்ந்த தொழில் தொடங்குவது, அதை பிராண்டிங் செய்வது குறித்த உத்திகள், பொருட்களை பேக்கிங் செய்வதில் உள்ள தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் தங்களது அனுபவங்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
மேலும், விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில் என்ன மாதிரியான உதவித் திட்டங்கள் உள்ளன என்பது குறித்தும் அலுவலர்கள் தெரிவிக்க உள்ளனர். இதில் வேளாண் வணிக வாய்ப்புகள் குறித்து தமிழ்நாடு வேளாண் கல்லூரியின் வணிக மேம்பாட்டுத் துறையின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அலுவலருமான ஞானசம்பந்தம் பேசுகிறார். சிறுதானியங்கள் மூலம் வருமானம் ஈட்டும் முறை குறித்து அது சார்ந்த நிறுவனத்தினர் பேசுகின்றனர். ஆன்லைன் மூலம் விற்பனையில் சாதித்த முருங்கை விவசாயி தனது அனுபவம் குறித்து பேசுகிறார்.'' இவ்வாறு அவர் கூறினார்.